அமெரிக்காவில் குவாட் உச்சி மாநாடு நிறைவு... இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய தலைவர்கள் பங்கேற்பு...

உலக நன்மைக்கான சக்தியாக குவாட் கூட்டமைப்பு இயங்கும் என குவாட் ஊச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குவாட் உச்சி மாநாடு நிறைவு... இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய தலைவர்கள் பங்கேற்பு...

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்டனில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில், குவாட் உச்சி மாநாடு நடைபெறும் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறைக்கு அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி, பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் சென்றனர். இதனை தொடர்ந்து குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த குவாட் உச்சி மாநாட்டில் நேரில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்த ஜோ பைடனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இன்று உலகம் கொரோனாவுடன் போராடும்போது, குவாட் உறுப்பினர்கள் மீண்டும் மனிதநேயத்தின் நலனுக்காக ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, குவாட் தடுப்பூசி முயற்சி இந்தோ-பசிபிக் பிராந்திய மக்களுக்கு நிச்சயம் உதவும் என நம்பிக்கை தெரிவித்தார். உலக நன்மைக்கான சக்தியாக இந்த குவாட் கூட்டமைப்பு இயங்கும் எனவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, குவாட்டில் எங்கள் ஒத்துழைப்பு இந்தோ-பசிபிக் மற்றும் முழு உலகிலும் அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து நியூயார்க்கில் இன்று நடைபெற உள்ள ஐ.நா. பொது சபையின் 76 வது அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக தற்போது பிரதமர் மோடி வாஷிங்டனில் இருந்து விமானம் மூலமாக நியூயார்க் புறப்பட்டுச் சென்றுள்ளார்.