இளைய தலைமுறையினர் புகைபிடிக்க தடை! நியூசிலாந்து அரசு அதிரடி முடிவு..... 

இளைய தலைமுறையினர் புகைபிடிக்க தடை விதிக்க நியூசிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

இளைய தலைமுறையினர் புகைபிடிக்க தடை! நியூசிலாந்து அரசு அதிரடி முடிவு..... 

நியூசிலாந்து நாட்டின், இளைய தலைமுறையினர் புகையிலை பொருட்களை தங்களது வாழ்நாளில்  நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அந்நாட்டு அரசு தடை செய்ய திட்டமிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களை வாங்க கூடாது என அறிவித்தது. இதை தொடர்ந்து, புகை பிடிப்பதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் ஒரு தனித்துவம் வாய்ந்த சட்டத்தை கொண்டு வருவதாக தெரிவித்தது.  இந்த சட்டமானது 14  மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள், புகைப்பதற்கு முற்றிலும் தடையாக அமையும் எனவும் தெரிவித்துள்ளது. இவ்வகையான சட்டம் அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் தொடங்கி 65 ஆண்டுகளுக்கு பின் கடைகளுக்கு சென்று அவர்களால் சிகரெட் வாங்க முடியும் எனவும் அதற்கு அவர்கள் தங்களுக்கு 80 வயது நிறைவடைந்தது என்பதற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால் நடைமுறையில் பல தசாப்தங்கள் என்பதன் அடிப்படையில் அதற்குள் (தசாப்தம் என்பது 10 ஆண்டுகள்) சிகரெட் பிடிக்கும் பழக்கம் மறைந்துவிடும் எனவும் அதிகாரிகள் நம்புவதாக கூறியுள்ளனர். இதனால் 2008 ஆம் ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் புகையிலையை அனுபவிக்க முடியாத சூழல் நிகழக்கூடும் எனவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார  மந்திரியான டாக்டர் ஆயிஷா வெரால் கூறுகையில் “இளைஞர்கள் புகைபிடிக்க ஒருபோதும் தொடங்ககூடாது என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நியூசிலாந்து அரசு அமல்படுத்த உள்ள இந்த சட்டத்தை  டாக்டர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் என அனைவரும் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டம் பற்றிய  கருத்துக்களை ஒட்டகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜானட் கூக் கூறுகையில் “இந்த சட்டமானது சிகரெட் புகைப்பதை மக்கள் நிறுத்த உதவும் அல்லது குறைக்க உதவும்.  இதனால் இளைய தலைமுறையினர் நிகோடினுக்கு அடிமையாவது குறைய வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தார்.

2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் புகைபிடிப்போர் விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க இந்த சட்டம் வழிகாட்டும் எனவும் இறுதியில் அதை முற்றிலுமாக அகற்றும் என நியூசிலாந்து அரசு நம்புகிறது.