மக்களின் சோகத்தை விட என் திருமணம் பெரிதல்ல! - நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா!

நாட்டு மக்கள் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் என் திருமணம் தள்ளிப்போனது முக்கியமில்லை என நியூசிலாந்து பிரதமரான ஜெசிந்தா கூறியுள்ளார்.

மக்களின் சோகத்தை விட என் திருமணம் பெரிதல்ல! - நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா!

பல புதிய கட்டுபாடுகளை விதித்து வந்தாலும் தற்போது தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் அந்நாட்டு பிரதமர் தனது திருமணத்தினை தள்ளி வைத்துள்ளார். கொரோனா பரவலில் நாட்டு மக்கள் அடைந்து வரும் துயரத்தை கண்டு ஒரு நாட்டின் பிரதமர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளது பெரும் ஆச்சர்யத்தை நிகழ்த்தியுள்ளது.

ஊரடங்கு கட்டுபாடுகளை சரியான முறையில் கையாண்டதால் முதல் இரண்டு அலைகளிலும் கொரோனா பரவலின் எண்ணிக்கையானது குறைந்து காணப்பட்டதில் நியூசிலாந்தும் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது உருமாறி இருக்கும் ஒமைக்ரான் ஆனது அந்நாட்டில் பரவ வேகமெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஒமைக்ரான் பரவலின் காரணமாக பல்வேறு கட்டுபாடுகளை அதிகரித்து நியூசிலாந்து அரசானது பார்கள் ,உணவகங்கள் மற்றும் திருமண நிக்ழவுகள் போன்றவற்றில் பங்கேற்க 100 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளதாலும் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதாலும் அந்நாட்டின் பிரதமர் தனது திருமணத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளார்.

40 வயதான ஜெசிந்தா ஆர்டெனுக்கு அவரின் நீண்ட கால நண்பரான கிளார்க் கேஃபோர்ட்டுடன் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாக சொல்லப்பட்டது. திருமணத்தை தள்ளி வைத்தது குறித்து ஜெசிந்தா கூறுகையில் கொரோனா தொற்று நோயினால் நாம் பலரை இழந்து தவிக்கிறோம் இந்த சோகத்தை விட  திருமணம் தள்ளிப்போனது எனக்கு பெரிய சோகமாக இருக்காது என தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரதமர் ஒருவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை தூண்டியுள்ளது.

இதனை தொடர்ந்து பேசிய அவர் மக்கள் அனைவரும் கட்டாயம் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும்  தடுப்பூசி பெற்ற பின்பு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டாலும், நோயின் தீவிரத்தைக் குறைத்து, மருத்துவமனை பராமரிப்பு இல்லாமல், வீட்டிலேயே குணமடைய பூஸ்டர் டோஸ் வழிவகுக்கும் என் கூறியுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து நியூசிலாந்துக்கு வரும் பயணிகள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.