நிலச்சரிவில் சிக்கியதாக அறிவிக்கப்பட்ட பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
நிலச்சரிவு:
கொலம்பியாவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்குள்ள சாலை ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் நிலச் சரிவில் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணிகள்:
அதிகாரிகளின் கூற்றுப்படி, நிலச்சரிவில் சிக்கியதாக அறிவிக்கப்பட்ட பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை மீட்புக் குழுவினர் தற்போது தேடி வருவதாக தெரிகிறது.
இதற்கிடையில், கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கூறுகையில், இதுவரை ஒன்பது பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சுமார் 20 பேரைக் காணவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன:
கொலம்பியாவின் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், பேருந்தில் சுமார் 25 பயணிகள் இருந்தனர் எனக் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் தொடங்கிய மழையால், கொலம்பியா கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வானிலையை எதிர்கொண்டு வருகிறது எனவும் இதுபோன்ற வெவ்வேறு சம்பவங்களில் இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-நப்பசலையார்