இந்தியாவை அச்சுறுத்துகிறதா சீனா? இலங்கையும் இதற்கு உடந்தையா?

ராணுவ நோக்கத்துக்காக பயன்படுத்த சீனாவுக்கு அனுமதி இல்லை - ரணில் விக்ரமசிங்கே..!

இந்தியாவை அச்சுறுத்துகிறதா சீனா? இலங்கையும் இதற்கு உடந்தையா?

இலங்கை துறைமுகத்தை ராணுவ நோக்கத்துக்காக பயன்படுத்த சீனாவுக்கு அனுமதி இல்லை என அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இலங்கை வந்த சீன உளவுக் கப்பல்: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவுக் கப்பல் 'யுவான் வாங் 5'  வந்தடைந்தது. நேற்று அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்த சீன உளவுக் கப்பல் வரும் 22-ந் தேதி வரை அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லைக்கு மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறை என்பதால் இந்திய ராணுவம் இதை அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்த சூழலில், அம்பன்தோட்டா துறைமுகத்தை ராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். 

இந்தியா அச்சத்தை தவிர்க்க அரசாணை: அதேசமயம், சீன உளவுக் கப்பல் குறித்த இந்தியாவின் அச்சத்தைப் போக்கும் வகையில், கப்பலின் வருகையை ஒத்தி வைக்குமாறு சீன அரசிடம் கோரிக்கை வைத்ததாக இலங்கை அமைச்சர் பந்துல குணவர்தனே தெரிவித்துள்ளார். இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கைக் கடலில் சீன உளவுக்கப்பல் எந்தவொரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளையும் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.