போரிஸ் ஜான்சன் மீதான அதிருப்தியில் 2 அமைச்சர்கள் ராஜினாமா!

போரிஸ் ஜான்சன் மீதான அதிருப்தியில் 2 அமைச்சர்கள் ராஜினாமா!

கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு சரிவர கையாள வில்லை என்று சொல்லி 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்திருப்பது இங்கிலாந்து அரசியலில் ஆளும் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து பிரதமராக பழமைவாத கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்றார். இங்கிலாந்து நாட்டில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இருந்தே போரிஸ்  ஜான்சன் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதி மந்திரி ரிஷி சுனக் ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். விதிகளை மீறியது மட்டுமின்றி மக்களிடம் பொய் கூறிய பிரதமரும், நிதி மந்திரியும் பதவி விலக வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நீதித்துறை மந்திரி டேவிட் வோல்ப்சன் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொந்தச் கட்சியைச் சேர்ந்த 54 எம்.பி.க்கள் கட்சித் தலைமைக்கு  கடிதம் எழுதினர். எனினும் பிரதமர்போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.  211 எம்.பி.க்களின் ஆதரவுடன் போரிஸ் ஜான்சன்  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். 

இந்த பரபரப்பு சற்றும் அடங்காத நிலையில், போரிஸ் ஜான்சன் கட்சியில் துணை கொறடாவாக பதவி வகித்த கிரிஸ் பின்ஷர் என்பவர் மீது பாலியல் புகார் எழுந்தது. நைட் கிளப் ஒன்றில், 2 ஆண்களிடம் கிரிஸ் பின்ஷர், பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. சொந்தக் கட்சியில் இருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. கிரிஸ் பின்ஷருக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில்,  அவர்துணை கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்டு கட்சி எம்.பி பதவியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டார். நீண்ட  தாமதத்திற்குப் பிறகு, கிறிஸ் பின்ஷர் அரசு பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். எனினும், கிரிஸ் பின்ஷர் விவகாரத்தில், போரிஸ் ஜான்சன் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை, போரிஸ் ஜான்சன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம் என்று கூறி, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இது தொடர்பாக தங்கள் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இன்போசிஸ் முன்னாள் தலைவர் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.  தன் அமைச்சரவையைச் சேர்ந்த இரு முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்தது போரிஸ் ஜான்சனுக்கு அதிர்ச்சி அளித்தது. எனினும், எதற்கும் அசராத போரிஸ் ஜான்சன், நதீம் சஹாவி என்பவரை நிதியமைச்சராகவும், ஸ்டீவ் பார்க்லே என்பவரை சுகாதாரத்துறை அமைச்சராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளார். கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு சரிவர கையாள வில்லை என்று சொல்லி 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்திருப்பது இங்கிலாந்து அரசியலில் ஆளும் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.