அமெரிக்க உளவுப்பிரிவை ஆட்டிப்படைக்கும் ஹவானா சிண்ட்ரோம்...

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு இயக்குநருடன் இந்தியா வந்த அதிகாரி ஒருவருக்கு சர்ச்சைக்குரிய ஹவானா சிண்ட்ரோம் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்க உளவுப்பிரிவை ஆட்டிப்படைக்கும் ஹவானா சிண்ட்ரோம்...

ஹவானா சிண்ட்ரோம் என்பது தொற்று நோயோ அல்லது அச்சுறுத்தலுக்குரிய நோயோ கிடையாது என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வாந்தி, அதீத தலைவலி, சோர்வு, தூக்கமின்மை, வித்தியாசமான உணர்வு, சத்தங்கள் சகிச்ச முடியாத நிலை போன்ற பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு கியூபாவின் ஹவானா நகரில் தங்கியிருந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்த வினோத பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுபோன்று பிற நாடுகளுக்கு சென்ற அமெரிக்கர்களுக்கும் இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

இது மனஅழுத்தத்தால் ஏற்பட்ட வியாதி என சொல்லப்பட்ட போதிலும், அதனை திட்டவட்டமாக மறுத்த அமெரிக்கா,   கியூபாவில் இருந்து தான் இந்த வகை பாதிப்பு தொற்றுயது என்றும், அதுவும் செயற்கையாக ரேடியோ கதிர்வீச்சு மூலம் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும்  குற்றஞ்சாட்டி வருகிறது.  

இந்த நிலையில் நடப்பு மாதம் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரியான வில்லியம் பர்ன்ஸுடன் வந்த குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த அதிகாரிக்கு இந்தியாவிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.