டிவிட்டரை பயன்படுத்தும் அரசாங்கங்கள், வணிக நிறுவனங்களுக்கு கட்டணம்.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

சமூக வலைதளமான டிவிட்டரை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசாங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரை பயன்படுத்தும் அரசாங்கங்கள், வணிக நிறுவனங்களுக்கு கட்டணம்.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் அண்மையில் டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார்.

தற்போதுள்ள கட்டுப்பாடுகளால் டிவிட்டரில் கருத்துச் சுதந்திரம் இல்லை எனத் தெரிவிக்கும் எலான் மஸ்க்,  அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் டிவிட்டரை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அவர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். எனினும்  சாதாரண பயன்பாட்டாளர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டரை வாங்கிய சில நாட்களிலேயே எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது பயன்பாட்டாளர்களுக்கு டிவிட்டர் சர்க்கிள் என்ற புதிய வசதியை சோதனை முறையில் டிவிட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சர்க்கிளில் 150 பேர் வரை இணைக்க முடியும் என்றும், தனது டிவிட்டை சர்க்கிளில் உள்ள அனைவருக்கும் பகிர முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.