கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி - போராட்டம் நடத்தும் மாணவர்கள்!
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், போலீசார் அவர்களை கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
முன்னதாக மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில், அதிபர் பதவி வகிக்கும் கோத்தபய ராஜபக்சேவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என மாணவர்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கொழும்பு தாமரை தடாகத்தில் இருந்து புறப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுவிடக் கூடாது என்பதற்காக போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் மாணவர்கள் தடையை தாண்டி முன்னேற முயன்றதால் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார், மாணவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது