கிழக்கு உக்ரைனில் தீவிரமடையும் போர் : 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்..!

கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு உக்ரைனில் தீவிரமடையும் போர் : 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்..!

கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் 40 நகரங்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. லுஹான்ஸ்க் பகுதியில் ரஷிய படைகள் கை மேலோங்கி உள்ளது. 

வான்வழி தாக்குதலையும், பீரங்கி தாக்குதலையும் ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ளது.  இதை உக்ரைன் படைத்தளபதி ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், செவிரோடொனெட்ஸ்க் பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் ஆனால் அதேநேரம் ஸ்திரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரையில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் மட்டுமே 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும்  நாடு முழுவதும் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, உக்ரைனில் 2-வது பெரிய நகரமான கார்க்கில் ரஷிய படைகள் குண்டு வீச்சு நடத்தியுள்ளன. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைனில் போர்க்குற்றங்கள் தொடர்பாக, ரஷிய பீரங்கிப்படையினர் அலெக்சாண்டர் பாபிகின், அலெக்சாண்டர் இவானோவ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்கள் மீதான நீதிமன்ற விசாரணையின்போது, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இவர்கள் மீதான வழக்கில் 31-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது, நாட்டின் முதல் போர்க்குற்ற வழக்கில் ரஷிய படைவீரர் ஒருவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை சமீபத்தில் விதிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.