ஈக்வடார் நாட்டில் பொருளாதார நெருக்கடி.. 12-வது நாளாக நீடித்து வரும் மக்களின் போராட்டம்!!

ஈக்வடார் நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான பழங்குடியின மக்களின் போராட்டம் 12-வது நாளாக நீடித்து வரும் நிலையில் இது ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் சதி என அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ குற்றம் சாட்டியுள்ளார்.

ஈக்வடார் நாட்டில் பொருளாதார நெருக்கடி.. 12-வது நாளாக நீடித்து வரும் மக்களின் போராட்டம்!!

கொரோனா பாதிப்பில் இருந்து அரைகுறையாக மீண்ட நிலையில் ரஷ்யா - உக்ரைன் போரால் உலகப் பொருளாதாரம் ஒரேயடியாக ஆட்டம் கண்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு, உணவுப் பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பிரேசில், அர்ஜெண்டினா தற்போது ஈக்வடார் என போராட்டத்தைச் சந்திக்கும் நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அந்த வகையில் ஈக்வடாரில் பழங்குடி மக்கள் நடத்தும் போராட்டம் 12-வது நாளை எட்டியுள்ளது. காவல்துறை மற்றும் ராணுவத்துடன் கடும் மோதல் நிகழ்வதால் பல நகரங்கள் கலவரக் காடாக காட்சி அளிக்கின்றன.

பொதுமக்கள் தரப்பில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருக்க, புயோ நகரக் கலவரத்தில் 18 காவலர்கள் காணாமல் போயுள்ளனர். தலைநகர் குயிட்டோவில் இரவு நேர ஊரடங்கும் பல  மாகாணங்களில் அவசர நிலையும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்துள்ள நிலையில், இது ஆட்சிக் கவிழ்ப்பு சதி என அதிபர் கில்லர்மோ குற்றம் சாட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர் அழைப்பதை ஏற்க மறுக்கும் மக்கள், அவசரநிலையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர்.