இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை - வேகமாக நிரம்பிய நீர் தேக்கங்கள்.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் கொட்டி வரும் கனமழையால் அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்படுவதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை - வேகமாக நிரம்பிய நீர் தேக்கங்கள்.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

பல இடங்களில் மின் வினியோகம் துண்டிப்பு:

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகள், ஊவா மாகாணம், தென் மாகாணம், அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், பல இடங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு

நீர்பிடிப்பு பகுதிகளில் 100 மில்லி மீட்டர் அளவில் மழை கொட்டியதால் அணைகள் நிரம்பி வழிகின்றன. கெனியன் நீர் தேக்கத்தில் ஒரு மதகு மற்றும் மேல் கொத்மலை அணையில் இருந்து மூன்று மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

இதேபோல், நோர்ட்டன் பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர் தேக்கத்தில் இருந்து 6 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்கிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலபகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் மாயமானார். பொகரவெவில பகுதியில் உள்ள களனி கங்கை கிளை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூதாட்டியும், அவரது 5 வயது பேத்தியும் அடித்துச் செல்லப்பட்டனர். பாட்டியின் உடல் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடலை தேடும் பணி நடைபெறுகிறது.

நிலச்சரிவு, பாறைகள் உருண்டதால் சாலை போக்குவரத்து பாதிப்பு

கினிகத்தேனை விதுலிபுர டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் 2 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. இதேபோல், பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்ததால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவை துண்டிப்பு

இதேபோல், கொட்டகலை - தலவாக்கலை உள்ளிட்ட ரயில் பாதைகளில் மண் சரிவு, மரங்கள் முறிந்து விழுந்ததால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளது.