ஒமிக்ரானின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் என்ற புதிய கொரோனா மாறுபாடு இதுவரை கண்டறியப்பட்ட மாறுபாடுகளிலேயே மிகவும் மோசமான மாறுபாடாக கருதப்படுகிறது.

ஒமிக்ரானின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

இதனால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.. இந்த புதிய மாறுபாட்டில் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள் இருப்பதால், மற்ற கோவிட்-19 வகைகளை விட இது வேகமாக பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மாறுபாடு இதுவரை சுமார் 40 நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார மையம், கவலை அளிக்கக்கூடிய மாறுபாடு என்றும் அறிவித்தது. கொரோனாவின் இந்த ஒமிக்ரான் மாறுபாட்டின் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் காணப்பட்ட அறிகுறிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

காய்ச்சல், இருமல், சளி, வாசனை அல்லது சுவை இழப்பு ஆகியவை கொரோனாவை அடையாளம் காணும் அறிகுறிகளாகும். ஆனால் ஒமிக்ரானில் அப்படி இல்லை. இந்த புதிய மாறுபாடு நோயாளிகளுக்கு அறிமுகமில்லாத அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. அதீத சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு,  வறட்டு இருமல், அதிக காய்ச்சல் ஒமிக்ரானின் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து பாதுகாக்க, முன்பு போலவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனை செய்துகொள்ளுங்கள். முகக்கவசத்தை சரியாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்து, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது அவசியம். இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் நீங்கள் போடவில்லை எனில், தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள். இதனுடன், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பதும் முக்கியம்.

காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரை அருந்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு இஞ்சி துளசி கருப்பு மிளகு தேநீர் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சமைக்கும் உணவில் அவசியம் மஞ்சள், மிளகு ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.
ஏதேனும் ஒரு பழத்தின் ஜூஸை தினமும் அருந்த வேண்டும்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் அதிக வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ப்ரோக்கோலியில் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் காணப்படுகின்றன. கிவியில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக ஏற்படுத்துகிறது.