சிறு குற்றங்களுக்கும் மரண தண்டனையா?  : ஐ.நா. பொதுச் செயலாளர் புகாருக்கு ஈரான் எதிர்ப்பு !!

ஈரானில் நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

சிறு குற்றங்களுக்கும் மரண தண்டனையா?  : ஐ.நா. பொதுச் செயலாளர் புகாருக்கு ஈரான் எதிர்ப்பு !!

ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரானில் தேவையற்ற மரண தண்டனைகள் குறித்த ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்துப் பேசிய பேரவைத் துணைத் தலைவர் நடா அல்-நஷிப்,  2020-ம் ஆண்டு 260 பேரும் கடந்த ஆண்டு 14 பெண்கள் உள்பட 310 பேரும் இதேபோன்று தூக்கிலிப்பட்டதாகவும், நடப்பாண்டும் அது தொடர்வதாகவும் கவலை தெரிவித்தார்.

ஐநா பொதுச் செயலாளரின் அறிக்கையில் தூக்கிலிடப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் மிகக் கடுமையான குற்றங்கள் அல்லாத விஷயங்களுக்குக் கூட மரண தண்டனை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். நியாயமான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என்றும் சர்வதேச சட்டத்தை மீறி சிறார் குற்றவாளிகளுக்கும் ஈரான் மரண தண்டனையை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.  

இன்னும் 85-க்கும் மேற்பட்ட சிறார் குற்றவாளிகள் மரண தண்டனையை எதிர்நோக்கி இருப்பதாகவும் நஷீப் தெரிவித்தார். மேலும் ஈரானில் நடைபெற்று வரும் பல மனித உரிமை மீறல்களையும் அவர் பட்டியலிட்டார்.  இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஈரானின் துணை நிரந்தரப் பிரதிநிதியான மெஹ்தி அலி அபாதி,  ஈரானுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்கத்திய நாடுகளால் கட்டாயப்படுத்தப்பட்ட அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இது அவமானகரமான விஷயம் என்றும் அவர் சாடினார்.