சீனாவின் ஜீரோ கோவிட் நடவடிக்கை : சொந்த நாட்டிலேயே அகதிகளான மக்கள் !!

சீனாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஷீ ஜிங்பிங் அரசின் கடும் கெடுபிடியால், சொந்த நாட்டு மக்களே, அகதிகளைப் போல தப்பியோட வழியில்லாமல், தவித்துக் கொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஜீரோ கோவிட்  நடவடிக்கை : சொந்த நாட்டிலேயே அகதிகளான மக்கள் !!

கொரோனா இல்லாத தேசம் என்ற இலக்கை நோக்கி நகரும் சீனா, சுமார் 2 கோடி பேரை இரும்புக் கன்டெய்னர்களில் அடைத்துள்ளது. அங்கு ஒரே ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டாலும், தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில், அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி, கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தி வருவதால், தப்பித்தால் போதும் என்ற மனநிலையில், அந்நாட்டு மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

டெல்டா மற்றும ஒமிக்ரான் பாதிப்பு சீனாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், 'ஜீரோ கோவிட் சீனா' என்ற இலக்கை அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ளது. ஆனால், தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில், அரசு சர்வாதிகாரப் போக்குடன் நடப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குவாரன்டைன் முகாம்களா? வதைக் கூடங்களா? என சந்தேகம் எழும்பும் வகையில், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் என விதிவிலக்கில்லாமல், கோடிக்கணக்கான மக்கள் இரும்புக் கன்டெய்னர்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அட்டைப் பெட்டியைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இரும்புப் பெட்டிக்குள், ஒரு கட்டில், ஒரு டாய்லட் மட்டுமே இருக்கிறது. மேலும், இந்த இரும்பு பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, கால்நடைகளுக்குத் தீவனம் வழங்கப்படுவதைப் போல, உணவுகள் வழங்கப்படுகின்றன. இதில் இரண்டு வாரங்கள் வரை தங்கவைக்கப்பட்ட பிறகு, பரிசோதனை செய்யப்பட்டு விடுவிக்கப்படுவர். ஒரு குடியிருப்பில் ஒருவருக்குக் கொரோனா உறுதியானாலும் கூட, ஒட்டுமொத்த குடியிருப்பையும் அப்புறப்படுத்தி முகாமுக்குக் கொண்டு சென்று விடுகின்றனர். இவ்வாறு டியான்ஜின் நகரில் மக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்ல அணிவகுத்து நிற்கும் பேருந்துகளின் வீடியோ வியப்பை ஏற்படுத்துகிறது.

சில நேரம் நள்ளிரவில் கூட இந்த அப்புறப்படுத்தும் நிகழ்வு நடைபெறும் நிலையில், தனிமைப்படுத்தலுக்கு வர மறுப்பவர்களை, தரதரவென இழுத்துச் செல்லும் நிகழ்வும் அரங்கேறுகிறது.  இப்போதைய நிலவரப்படி சீனாவில் 2 கோடி பேர், இரும்புப் பெட்டிகள் கொண்ட குவாரன்டைன் முகாம்களில் அடைப்பட்டுக் கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சீன அரசின் கடும் கெடுபிடியால் அவதிப்படும் மக்கள், ’ஆளை விடுங்கடா சாமி’ என தப்பிக்க வழி தேடி அலைகின்றனர். அவ்வாறு தப்பிக்க முயற்சி செய்பவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல், சிறிய வாகனங்கள், பேருந்து ஆகியவற்றின் மூலம் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்களையும் சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ஆங்காங்கே தீவிர ஊரடங்கையும் அமல்படுத்தி வருகிறது. நம்மூரைப் போலல்லாமல், சீனாவில் ஊரடங்கு என்றால் அதில் சிறு தளர்வு கூட காண முடியாது. சமீபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனை செல்வதில் கூட கெடுபிடி விதிக்கப்பட்டதால், அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு அஞ்சி, மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பயத்தில் வாங்கிக் குவிக்கும் ’பேனிக் பையிங்’கும் சீனாவில் அதிகரித்துள்ளது.

இதனிடையே, சீனா அடுத்த மாதம் குளிர்கால் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்தவுள்ளது. இந்த நேரத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஒலிம்பிக் கிராமத்திற்குள் வெளி ஆட்கள் செல்லா வண்ணமும், அதேபோல் உள்ளிருப்பவர்கள் வெளியே செல்லா வண்ணமும், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, Closed loop zone முறையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், உணவுகளைப் பரிமார ரோபோட்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் ஜீரோ கோவிட் நடவடிக்கை மீது உலக நாடுகளின் பார்வை திரும்பியுள்ளதால், சீனா கடும் விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளது.