உக்ரைனுக்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்கியது ஐரோப்பிய ஆணையம்..! மீண்டும் போர் உச்சமடையும் அபாயம்...!!

ரஷ்யாவின் கடும் எதிர்ப்புக்கிடையே ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்கியுள்ளது போர் உச்சமடையும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்கியது  ஐரோப்பிய ஆணையம்..! மீண்டும் போர் உச்சமடையும் அபாயம்...!!

நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினர் ஆக்குவதில் ஆரம்பத்தில் தயக்கம் காட்டி வந்தது. ஏனென்றால் உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் நேட்டோ படைகள் நேரடியாக போரில் இறங்க வேண்டியது விதிமுறை.

அதனால் ரஷ்யாவுடனான நேரடி மோதலைத் தவிர்க்க உக்ரைனை தூண்டி விடுவதுடன் அமைதி காத்தது. ஆனால், உறுப்பினராக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர் கோரிக்கை விடுத்து வந்தார். தற்போது அவரைச் சமாளிப்பதற்காக முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க முடிவு செய்தது. இதற்காக பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் உக்ரைன் மற்றும் மால்டோவாவிற்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன்டர் லேயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  ஜார்ஜியாவுக்கும் விரைவில் அந்தஸ்து வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

இது முதல் கட்ட நடவடிக்கைதான் என்றாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராவதற்கான நடைமுறைகள் முடிய  இன்னும் பல ஆண்டுகள் ஆகும். இருப்பினும், பனிப்போருக்குப் பின் தற்போது உக்ரைனுக்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்கி ரஷ்யாவுடனான நேரடி மோதலுக்கு ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருவதையே இந்த முடிவு காட்டுவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இனி உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மிகக் கடுமையாக்கும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.