“மூளையை உண்ணும் அமீபா..” பதிவான முதல் உயிரிழப்பு..! அச்சத்தில் மக்கள்..!

“மூளையை உண்ணும் அமீபா..” பதிவான முதல் உயிரிழப்பு..! அச்சத்தில் மக்கள்..!

கொரோனாவின் தாக்கம் ஆட்டி படைத்து வந்த நிலையில், தற்போது தென் கொரியாவில் புதிதாக ஒரு நோயால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி பலரது உயிரை பறித்தது. இதற்காக பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தன. இதனால் உலகமே ஸ்தம்பித்து போனது. 

பின்னர் இதற்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, செலுத்தப்பட்டு படிப்படியாக குறைந்துகொண்டு வந்த நிலையில், தற்போது அது மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதனால் இந்தியா போன்ற நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. 

இந்த அச்சம் ஒரு பக்கம் இருக்க, தென் கொரிய நாட்டில் புதிய வகை நோயால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரிய நாட்டில் ஒருவருக்கு “நெக்லேரியா ஃபௌலேரி” என்னும் “ மூளையை உண்ணும் அமீபா” என்ற நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

50 வயதான அந்த நபர் டிசம்பர் 10 ஆம் தேதி தாய்லாந்திலிருந்து தென் கொரியா திரும்பியுள்ளார். அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கபட்டார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் இந்த மூளையை உண்ணும் அமீபா என்ற நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்த அவர், கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.  இந்த மூளையை உண்ணும் அமீபா தொற்று தென்கொரியாவில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறை. இந்த நோய் முதன்முதலில் அமெரிக்காவில் 1937ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நெக்லேரியா ஃபௌலேரி என்பது  நன்னீர் ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் குளங்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு அமீபாவாகும். மனிதர்கள் குளங்களிலோ, கடலிலோ நீச்சல் அடிக்கும்போது இந்த அமீபாவானது மூக்கின் வழியே உள்நுழைந்து நேரடியாக மூளையிலுள்ள திசுக்களைத் தாக்கி அழிக்கிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம், நெக்லேரியா ஃபௌலேரி மனிதனுக்கு மனிதன் பரவும் வாய்ப்புகள் குறைவு என தெரிவித்துள்ளது. மேலும், நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியினர், அந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. 

-- சுஜிதா ஜோதி

இதையும் படிக்க : ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு...! இன்று தொடங்கியது..!