தொடரும் மீட்பு பணி.. உக்ரைனிலிருந்து 240 பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தொடரும் நிலையில்,  6வது விமானம் 240 பயணிகளுடன் ஹங்கேரியிலிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டது. 

தொடரும் மீட்பு பணி.. உக்ரைனிலிருந்து 240 பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

உக்ரைன் மீது 5வது நாளாக ரஷ்யா தொடர் தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. முக்கிய நகரங்களை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், துருப்புகளை அனுப்பி மும்முனை தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. 

இதனிடையே ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், உக்ரைனில் தவிக்கும் மருத்துவ மாணவர்களை விமானத்தில் மீட்டு வரும் இந்திய அரசு, இதுவரை ஆயிரத்து 156 பேரை  தாயகம் சேர்த்துள்ளது. மீதமுள்ள மாணவர்களும் ருமேனியா, ஹங்கேரி தலைநகர்களுக்கு பேருந்து வழியாக அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.  

இந்தநிலையில் பெரும் பதற்றத்திற்கு இடையே 6வது ஏர் இந்தியா விமானம், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டிலிருந்து 240 மாணவர்களை அழைத்து கொண்டு டெல்லி புறப்பட்டுள்ளது.  இதற்கிடையே தலைநகர் கீவ் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அங்கு ஊரடங்கு கட்டுப்பாட்டை நீக்கியுள்ளார். இதையடுத்து அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உடனடியாக ரயில் மூலம், உக்ரைன் எல்லைகளை அடைய அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.