ஆப்கன் விவகாரம் குறித்து வரும் 24ம் தேதி சிறப்பு கூட்டம் நடத்துவதற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் மக்கள் மத்தியில் ஒருவித அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி உள்ளதால் அந்நாட்டில் பெண்களுக்கான சுதந்திரம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் பல்வேறு மனித உரிமை மீறல்களும் தலிபான் பயங்கரவாதிகளால் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆப்கனில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.