அமெரிக்காவில் உயிர்வாழும் 90 வயதான - பழமையான மீன்!!

மெதுசெலா என்ற 90 வயதான மீன் உலகின் மிகவும் பழமையான மீன் என சொல்லப்படுகிறது.

அமெரிக்காவில் உயிர்வாழும் 90 வயதான - பழமையான மீன்!!

அத்திப்பழங்களை உண்பதன் மூலம் உடலின் வயிற்றுப்பகுதியை மெலிதாக வைத்துக் கொண்டிருக்கும் இந்த மீனை உலகின் பழமையான மீன் என நம்பப்பட்டு வருவதாக கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸின் உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 90 வயது உடையதாக நம்பப்பட்டு வரும் இந்த மீன் 4 அடி நீளம் மற்றும் 40 பவுண்டு அதாவது 18.1 கிலோகிராம் எடை கொண்ட ஆஸ்திரேலிய நுரையீரல் மீன்வகை என்கின்றனர். இந்த மீனானது 1938 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ அருங்காட்சியத்திற்கு கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது.

நுரையீரல் மற்றும் செவுள்களைக் கொண்ட பழமையான இனமான இந்த ஆஸ்திரேலியா நுரையீரல் மீன் நில மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு இடையேயான பரிணாம இணைப்பாக  நம்பப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மிகவும் பழமையான ஆஸ்திரேலிய நுரையீரல் மீன் சிகாகோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்தது. கிராண்ட்டாட் என்று பெயரிடப்பட்ட அந்த மீன் 2017 இல் தனது 95 வயதில் இறந்தது.

ஆர்கானிக் ப்ளாக்பெர்ரிகள், திராட்சைகள் மற்றும் ரோமெய்ன் கீரைகள் மெதுசெலாவின் தினசரி உணவாக வழங்கப்பட்டு வருவதாகவும்,  அகாடமியில் இன்னும் இரண்டு ஆஸ்திரேலிய நுரையீரல் மீன்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 1952 இல் கொண்டுவரப்பட்ட 11 கிலோ எடையுடைய மீனும், மற்றும் 1990 இல் கொண்டு வரப்பட்ட 7 கிலோ எடையுடைய மீனும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள மேரி நதியிலிருந்து அருங்காட்சியகத்துக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய நுரையீரல் மீன்கள் இப்போது அருகி வரும் உயிரினமாக உள்ளது.