மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தனியார் கல்லூரி ...வீடியோ வைரல்...

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தனியார் கல்லூரி ...வீடியோ வைரல்...

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை செம்மஞ்சேரியில் செயல்பட்டு வரும் சத்யபாமா பல்கலைக்கழக கேண்டீனில் நேற்று முன் தினம் உணவு உண்பதற்காக முதலாமாண்டு மாணவர்கள் சென்ற நிலையில், அப்போது அங்கு ஏற்கனவே உணவருந்திக் கொண்டிருந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள், முதலாமாண்டு மாணவர்கள் செல்ல வழிவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து தடுத்த இரண்டாம் ஆண்டு மாணவர்களை முதலாம் ஆண்டு மாணவர்கள் தட்டிக் கேட்டபோது வாக்கு வாதம் ஏற்பட்டு இரண்டாமாண்டு மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை அடித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த முதலாமாண்டு மாணவர் ஒருவர் தனது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோரை அழைத்துச் சென்று முதலாம் ஆண்டு மாணவர்களை தாக்கிய இரண்டாமாண்டு மாணவர்களுள் ஒருவரை சரமாறியாக தாக்கிய நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த சண்டை கோஷ்டி மோதலாக மாறி இரு குழுவாக தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த மோதலை  சில மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ள நிலையில் வீடியோ வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கடந்த 17 ஆம் தேதி தான் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர் ஒருவரை கடத்தி அறையில் வைத்து அடித்து பிரச்சனையானதாகவும், கல்லூரி நிர்வாகம் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யவிடாமல் பார்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்கள் அடித்துக் கொண்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.