குடியிருப்புவாசிகளுக்கு பாடம் புகட்டிய மாணவர்கள்!

குடியிருப்புவாசிகளுக்கு பாடம் புகட்டிய மாணவர்கள்!

மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய நூதனப் போராட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மாணவர்களின் நூதன போராட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இக்கல்லூரி வெளியே அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிறுத்தத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் ஒரு நிழற்குடை அமைக்கப்பட்டது. நீளவாக்கில் பலகை போன்று இருந்த அந்த இருக்கையில் கல்லூரி மாணவர், மாணவிகள் ஒன்றாக அமர்ந்து பேசுவது வழக்கம். இந்நிலையில், இப்படி ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து பேசுவது பிடிக்கவில்லை எனக்கூறி, அப்பகுதி குடியிருப்பு சங்கத்தினர் நாள்தோறும் குற்றம் சாட்டி வந்தனர். ஒரு கட்டத்தில் நீள வாக்கில் இருந்த அமரும் பலகையை உடைத்து, ஒருவர் மட்டும் அமரும் வகையில், 3 இருக்கைகளை தனித்தனியாக அமைத்தனர்.

இதனால் கோபமடைந்த மாணவர்கள், யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு நூதன போராட்டத்தை கையிலெடுத்தனர். ஒன்றாக இருந்ததால்தானே இருக்கையை உடைத்தீர்கள், எங்கள் போராட்டமே இனி அதுதான் என்ற பாணியில் அதிரடி முடிவெடுத்தனர். அதன்படி, அடுத்த நாள் நிழற்குடைக்கு சென்ற மாணவ மாணவிகள், ஒருவர் மடியின் மீது ஒருவர் அமர்ந்து போராட்டத்தை தொடங்கினர்.

புதிய நிழற்குடை அமைக்க மேயர் உறுதி

இதற்கு இந்திய மாணவர் சங்கமும் உறுதுணையாக நின்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகவே, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்றார். 21வது வயதில் மேயரான இந்தியாவின் இளவயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவ மாணவிகளின் இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அறியாமையை கலைந்து ஆண் பெண் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இதுபோன்ற போராட்டங்கள் வலியுறுத்தும் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து அங்கு புதிய நிழற்குடை அமைக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒன்றாக அமர்ந்து சகஜமாக பேசுவதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் பலர் இணையத்தில் கருத்திட்டு வருகின்றனர். ஆண் பெண் பேசினாலே அது தவறாகத்தான் போய் முடியும் என்ற அறியாமையில் உள்ளோரை, இன்றைய சமுதாயம் ஏறெடுத்தும் பார்க்காது என்பதற்கு இந்த போராட்டமே ஒரு சிறந்த உதாரணம்.