இனி காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்பக் கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும்!

நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்பக் கொடுத்தால் பத்து ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இனி காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்பக் கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும்!

மலை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் காலி பாட்டில்களை வனப்பகுதி மற்றும் சாலையோரம் வீசிச் செல்கின்றனர். சிதறிக் கிடக்கும் பாட்டில்களால் வனவிலங்குகள் காயமடைவதுடன் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாவட்டத்தின் 15 இடங்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில் 'கூடுதலாக 10 ரூபாய் பெறப்படும் என்ற ‘ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

பயன்படுத்திய பின்னர் காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து கூடுதலாக செலுத்திய பத்து ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.  சுற்றுச்சூழலை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு மது குடிப்போர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் கேட்டுக் கொண்டுள்ளார்.