சென்னை அண்ணா சாலையில் வீட்டின் வாடகையை உயர்த்திக் கொடுக்கவில்லை என்பதற்காக 80 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மசூதி அருகில் உள்ள பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அம்மணியம்மாள். 80 வயது மூதாட்டியான இவர், வீரராகவன் என்பவர் வீட்டில் கடந்த 50 வருடங்களாக குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டில் தனியாக வசிக்கும் இவரை வீட்டின் உரிமையாளர் வீரராகவன், அவரது மனைவி உமா மகேஸ்வரி மற்றும் அவர்களுடைய மகன் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஹேமத் பிரசாத் ஆகியோர் வீட்டின் வாடகையை உயர்த்திக் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
அப்போது, 80 வயதான தன்னால் வெளியே சென்று சம்பாதிக்க முடியாத காரணத்தினால் தன்னால் வாடகையை உயர்த்திக் கொடுக்கமுடியவில்லை கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த வீரராகவன் மற்றும் அவரது மகன் மனைவி ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடித்து உதைத்து, வீட்டை பூட்டிவிட்டு, மேலும் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களையும் வெளியில் வீசியுள்ளனர்.
அதோடு, அவரிடம் இருந்த ஓய்வூதிய தொகையையும் பறித்துச் சென்றுள்ளனர். அப்போது, அந்த மூதாட்டியை தாக்க முற்பட்டபோது அருகிலிருந்தவர்கள் அவர்களைத் தடுக்க முற்பட்டனர். அப்போது ஊர்க்காவல் படையை சேர்ந்த ஹேமத் பிரசாத் அவர்களையும் கையில் இரும்பு ஆயுதங்களைக் கொண்டு தாக்கினார்.
வாடகை உயர்த்தி தாராததால், 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி என்று கூட பாராமல் இரக்கமின்றி தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மூதாட்டி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க | பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளி...! ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!