அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய வகை கொரோனா “நியோகோவ்” - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய வகை கொரோனா “நியோகோவ்” - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

சீனாவில் உகான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் முடிவுக்கு வராத நிலையில் மேலும் டெல்டா, பீட்டா, காமா, ஒமைக்ரான் என உருமாறிய பல கொரோனா வைரஸ்கள் உலகை ஆட்டிப்படைத்து வருகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் கடைசியாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் அதிகளவில் பரவினாலும் லேசான பாதிப்புகளையே ஏற்படுத்தி வருவது ஆறுதல் அளிக்கிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நியோகோவ் என்ற பெயரிலான உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

இதுபற்றி ரஷியாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி நியோகோவ் வைரஸ், சுவாச நோயை ஏற்படுத்துகிற மெர்ஸ்-கோவ் உடன் தொடர்புடையதாகும். அதே நேரத்தில் இந்த நியோகோவ் வைரஸ் முற்றிலும் புதியது அல்ல. ஏனெனில் இது மெர்ஸ்-கோவ் வைரசுடன் இணைக்கப்பட்டுள்ளது. நியோ கோவ் வைரஸ்கள் வவ்வால்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் மிக அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு மத்தியில் ஒரு ஆறுதலான தகவலை ரஷிய அரசு வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் அளித்திருக்கிறது. நியோகோவ் கொரோனா வைரஸ் தொடர்பாக சீன ஆராய்ச்சியாளர்களால் பெறப்பட்ட தரவுகளை வெக்டர் ஆராய்ச்சி மையம் அறிந்திருக்கிறது. தற்போது இந்த புதிய வைரஸ், மனிதர்களிடையே தீவிரமாக பரவுகிற தன்மை கொண்டதல்ல என்பதுதான். எனவே இப்போதைக்கு இந்த வைரசைப்பற்றி பயப்படத்தேவையில்லை என்று நம்பலாம்.