ஏற்கனவே பாட்டியை கொன்று வந்த மர்மநபர்... திடீரென பள்ளிக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு - 21 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 18 மாணவர்கள் உள்பட 21  பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஏற்கனவே பாட்டியை கொன்று வந்த மர்மநபர்... திடீரென பள்ளிக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு - 21 பேர் பலி!

டெக்சாஸ் மாகாணத்துக்கு உட்பட்ட உவல்டே பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு கோடை விடுமுறையை ஒட்டி நாளையுடன் பள்ளி வகுப்புகள் நிறைவடைய இருந்தது. இந்தநிலையில் திடீரென வாகனத்தில் பள்ளிக்கு வந்த நபர், கையில் இருந்த துப்பாக்கியுடன் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் மற்றும் அதனை தடுக்க வந்த ஆசிரியர்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனிடையே குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, காவல் துறைக்கு பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடம் விரைந்த போலீசார், மர்ம நபர் மீது பதில் தாக்குதல் நடத்தி அவரை சுட்டு வீழ்த்தியுள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 18 மாணவர்கள் உள்பட 21 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 13க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயமுற்றுள்ளனர். இந்தநிலையில் படுகொலை சம்பவத்தை உறுதி செய்துள்ள மாகாண ஆளுநர், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதனிடையே கொடூர சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன், அந்த நபர் தனது  பாட்டியை படுகொலை செய்து விட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இனவெறி தாக்குதலா அல்லது மனநிலை பாதிப்பு காரணமாக அந்த நபர் படுகொலை சம்பவத்தை அரங்கேற்றினாரா என போலீசார் விசாரிக்கின்றனர். இந்தநிலையில் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் உயிரிழந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள தூதரகங்கள், அரசு அலுவலகங்களில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.