ஆசிரியர் செயலுக்கு, ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகத்தையும் குற்றப்படுத்துவதா? மதுவந்தி ஆவேசம்!!

ஆசிரியர் செயலுக்கு, ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகத்தையும் குற்றப்படுத்துவதா? மதுவந்தி ஆவேசம்!!

எனது பாட்டி உருவாக்கிய பிஎஸ்பிபி பள்ளியின் பெயரை கெட்டுப்போக விடமாட்டேன் என ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி ஆவேசம் பொங்க தெரிவித்துள்ளார். 

கேகே நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததான சம்பவம் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவர் மீது மாணவிகள் புகார் அளித்தும், பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாது அண்மையில் அவர் ஆன்லைனில் மாணவிகளிடம் செய்த ஆபாச சேட்டைகளே தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது.  

இதைத்தொடர்ந்து நேற்று அவர் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளியிடம் விசாரிக்க சென்ற அதிகாரிகளுக்கும் பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் பத்மசேஷாத்ரி பள்ளியின் டிரஸ்டியாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் செயல்பட்டு வந்ததால், அவரும் அவரது மகள் மதுவந்தியும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் மதுவந்திக்கும் இந்த பள்ளிக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று சொல்லப்படுகிறது.  


இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து மதுவந்தி விளக்கமளித்துள்ளார்.  ஆசிரியர் மீதான புகாரை கேள்விப்பட்டதும், அதனை விசாரிக்க இமெயில் மூலம் தனது தந்தை  ஒய்.ஜி.மகேந்திரன், தகுந்த நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாது ராஜகோபாலன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனி நபர் செய்த காரியத்திற்காக ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகத்தையும் தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இந்த பள்ளி தனது பாட்டியின் பாரம்பரியம் என்றும். அவர் கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த பள்ளியின் பெயரை கெட்டுப்போக விடமாட்டேன் என்று ஆவேசம் பொங்க தெரிவித்துள்ளார். 

 தான் பாஜகவில் இருப்பதால், இந்த பிரச்சனைக்குள் சிலர் சாதியை உள்ளே கொண்டு வருவதாகவும், சாதி ரீதியாக பேசும் கோமாளிகளை விடமாட்டேன். கேள்வி கேட்கத்தான் செய்வேன் என்றும்,  அந்த கோமாளிகள் தான் தங்களை அடக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.