கடைக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வரும் ஜேக் ஸ்பேரோ....

பழனியில் நாய்‌ ஒன்று‌ வீட்டிற்கு தேவையான பொருட்களை‌ கடைகளுக்கு சென்று வாங்கி வருவது, காண்போரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடைக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வரும் ஜேக் ஸ்பேரோ....

 திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சண்முகபுரத்தை சேர்ந்த தாஸ் பெர்னாண்டஸ் என்பவர், பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். செல்லபிராணியான நாய்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவரான இவர், தனது வீட்டில் லேபர்டர் வகையை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

நான்கு வயதான இந்த உயர்ரக நாய்க்கு ஜேக் ஸ்பேரோ என பெயர் சூட்டியுள்ளார். தாஸ் பெர்னாண்டஸுடன் மிகவும் அன்பாக பழகி வந்த ஜேக் ஸ்பேரோ, தனது உரிமையாளரின் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடைக்கு சென்று வாங்கி வருவதை வாடிக்கையான கொண்டுள்ளது.

அதன்படி வீட்டிற்கு தேவையான மளிகைபொருட்களை ஒரு சீட்டில் எழுதி அதை ஒரு சிறிய கூடையில் வைத்து, அந்த கூடையை உரிமையாளரான பெர்னாண்டஸ் நாயிடம் கொடுக்கின்றார். ஜேக் ஸ்பேரோ அந்த கூடையை தன் வாயில் கவ்விக்கொண்டு கடைக்கு சென்று சரியான பொருட்களையும், மீதிபணத்தையும் வாங்கி வருகிறது. இதனைகண்ட பொதுமக்கள் புத்திசாலி நாயான ஜேக் ஸ்பேரோவை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

இதற்கிடையில் நாய் ஜேக்ஸ்பேரோ அடிக்கடி பொருட்கள் வாங்க வெளியே சென்று  வருவதால் அப்பகுதி மக்களிடம் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக தினமும் உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகளை வாங்கி வரும் ஜேக்ஸ்பேரோ, உழவர்சந்தை வியாபாரிகள் மற்றும்‌ பொதுமக்களுக்கு நல்ல நண்பனாக மாறிவருகிறது.