விஜய் ஆண்டனி மகள் இழப்பிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்..!

தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மன அழுத்தம் காரணமாக இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, தற்போது திரைத்துறை பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

இசையமைப்பாளர் மற்றும் அவரது மனைவிக்கும் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறியும் வருகிறார்கள்.  அந்த வகையில் முன்னனி நடிகர்களான சிம்பு, கார்த்தி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சந்தானம், நடிகை குஷ்பூ , இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா , இயக்குநர் பாரதிராஜா என பலர் வருகை தந்து தங்களது இரங்கல்களைப் பதிவு செய்தனர். 

தொடர்ந்து, நடிகர்கள் சத்தியராஜ் மற்றும் பார்த்திபன் தங்களது உணர்வுபூர்வமான இரங்கல்களை ப்திவு செய்தனர். 

நடிகர் பார்த்திபன் இரங்கல்:-

குழந்தைகள் கல்யாணம் ஆகி பிரிந்து செல்வது பெற்றோர்களால் தாங்க முடியாது.  இந்த இழப்பை எவ்வாறு அவர் தாங்கிக் கொள்வார் என்று தெரியவில்லை  பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு நேரடியாக குழந்தைகளை கண்காணிக்கலாமே...! என கூறினார்.  பெற்றோர்களை விட ஆசிரியர்களே அதிக நேரம் குழந்தைகளை கண்காணிப்பதால் இந்த கோரிக்கையை வைத்திருப்பதாக அவர் கூறினார்.

நடிகர் சத்யராஜ் இரங்கல் :- 

அன்பு தம்பி விஜய் ஆண்டனிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், இதைவிட ஒரு துயரமான சம்பவம் ஒரு மனிதனுக்கு நடக்கக் கூடாது,  ஆறுதல் கூற வார்த்தை இல்லாத ஒரு நிலையில் இருக்கிறேன், விஜய் ஆண்டனி தைரியமாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இரங்கல் :- 

இந்த செய்தியை கேட்டவுடன்  மனசு மிகவும் வேதனை அடைந்தது . ஒரு நிமிடத்தில் எதையும் யோசிக்காமல் எடுத்த முடிவு எல்லோரையும் பாதிக்கிறது.

வருங்காலத்தில் இதுபோன்று யாரும் தவறான முடிவு எடுக்கக் கூடாது. இது போன்ற தவறான முடிவுகள் பெற்றோருக்கு செய்யக்கூடிய பாவம். தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இரங்கல் :- 

சினிமா துறையை தாண்டி விஜய் ஆண்டனி ஒரு நல்ல மனிதர்.இந்த செய்தி என்னை மிகவும் பாதிப்படைய வைத்துள்ளது. இவ்வளவு சிறிய வயதிலேயே இந்த விபரீத முடிவு ஏன் எடுத்தார்கள் என தெரியவில்லை.

எந்த தவறான முடிவு எடுப்பதற்கு முன், நாம் பெற்றோர்களை நினைத்து பார்க்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுமான விக்ரமன் இரங்கல் :-

தற்கொலை எதற்கும் தீர்வாகாது... இந்த முடிவை அவர் ஏன் எடுத்தார் என தெரியவில்லை. விஜய் ஆண்டனி நல்ல மனிதர் எல்லோரிடமும் அன்புடன் பழகுபவர். இந்த இழப்பு அவருக்கு மிகப் பெரிய இழப்பாகும்.