தந்தைக்கு காலில் காயம்.. சொமேட்டோவில் டெலிவரி பாயாக 7 வயது சிறுவன்..!

சிறுவனின் தந்தைக்கு உதவ வேண்டும் என நபர் ஒருவர் ட்விட்டரில் வேண்டுகோள்..!

தந்தைக்கு காலில் காயம்.. சொமேட்டோவில் டெலிவரி பாயாக 7 வயது சிறுவன்..!

விபத்தில் சிக்கிய தனது தந்தைக்காக சொமேட்டோவில் டெலிவரி வேலை பார்த்து வரும் 7 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சொமேட்டோ: இன்று வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு ஓரளவு வருமானம் ஈட்டித் தரும் நிறுவனம் என்றால் அது சொமேட்டோ தான். ஆன்லைனில் ஒருவர் ஆர்டர் செய்யும் உணவினை அவர் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்று சேர்க்கும் பணி இவர்களுடையது. சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும், கொண்டு செல்லப்படும் உணவு சூடாக இருக்க வேண்டும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றியிருக்க வேண்டும் போன்ற பல சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் இந்தப் பணியில். இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஸ்மார்ட் போன் ஆகியவை தான் இவர்களது மூலதனம். வெயில், மழை பாராது உணவினை கொண்டு உரியவரிடம் சேர்க்கும் இப்பணியில், பல இளைஞர்களும் ஏன் சில சமயங்களில் பல இளம் பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர். 

7வயது டெலிவரி பாய்: ஆனால் இங்கு நாம் பார்க்கப் போகும் வீடியோவில், 7 வயது சிறுவன் டெலிவரி பாயாக மாறியிருப்பது காண்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது. தன்னிடம் உணவு கொண்டு வந்து கொடுத்த சிறுவனிடம் அந்த நபர், விசாரிக்கிறார். ''ஏன் இந்த வேலைக்கு நீ வந்தாய் என. அதற்கு அந்த சிறுவன் எனது தந்தை விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதால், குடும்ப வருமானத்திற்காக, பள்ளி முடித்த பிறகு மாலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை சொமேட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலைப் பார்ப்பதாக" கள்ளம் கபடமற்ற அச்சிறுவன் கூறுகிறான்.

சைக்கிளில் டெலிவரி: அவனிடம் இருப்பது ஒரு சைக்கிளும், ஸ்மார்ட் போனும் தான். சைக்கிளிலேயே உணவினை டெலிவரி செய்து வருவதாகவும் அச்சிறுவன் கூறியுள்ளான். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ராகுல் மிட்டல் என்பவர், இச்சிறுவனை ஊக்குவிக்க வேண்டும் என்றும், சிறுவனின் தந்தையின் கால் குணமாக அனைவரும் உதவி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.