சிறுவனின் ஒரு பதிலால் 14 ஆண்டுகளுக்குப்பின் சேர்ந்த குடும்பம்..! யார் இந்த சிறுவன்?

யாரையும் வெறுக்கக்கூடாது மனிதநேயத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒரு குட்டி சிறுவன் எடுத்துக்கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

சிறுவனின் ஒரு பதிலால் 14 ஆண்டுகளுக்குப்பின் சேர்ந்த குடும்பம்..! யார் இந்த சிறுவன்?

நவீன உலகில் நம்மை சுற்றி பலரிடமும் வெறுப்பும், வஞ்சனையும் தான் அதிகம் உள்ளது. அன்பு காட்டுதல், பொறுமை, நிதானம் என்ற ஒன்றை எதிர்பார்பதென்பது  தவறான ஒன்றாக உள்ளது. நாம் இப்படி இருப்பது தவறு,யாரையும் வெறுக்கக்கூடாது, மனிதநேயத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒரு குட்டி சிறுவன் எடுத்துக்கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல யூட்யூப் சேனல் ஒன்று உங்களுக்கு பிடிக்காத நபர் யார் என்று பொதுமக்களிடம் கேள்வி கேட்டனர்.எல்லோரும் ஒரு சில பதில்களை கூற, அந்த சிறுவன் கூறிய பதில் அனைவரையும் வியப்படைய செய்தது. அப்படி அந்த சிறுவன் என்னதான் கூறினான் என்ற எதிர்பார்ப்பு தானே உங்களுக்கு உள்ளது. அந்த சிறுவன் அதற்கு பதில் கூறியதாவது, " நாம் யாரையும் வெறுக்க கூடாது..இங்கே  எல்லோரும் நம்மை போன்றவர்கள் தான். சில பேருக்கு கஷ்டம் இருக்கும் ஆனால் அவர்கள் அதனை வெளிக்காட்டாமல் அவர்களுக்குள்ளாகவே கஷ்டத்தை வைத்துக்கொள்கின்றனர். அதனால் இங்கு யாரையும் பிடிக்காது என்று சொல்லக்கூடாது. எல்லோரும் நண்பர்கள் தான். என்னை கூட எல்லாரும் பல்லன் என்று அழைப்பார்கள். நமது நாடு ஒற்றுமையான நாடு. நாம் ஒற்றுமை இல்லாமல் இருக்கக்கூடாது. மனித நேயம் அனைவரிடமும் பரவ வேண்டும். இல்லையெனில் ஸ்பைடர் படத்தில் வரும் வில்லன் போல நிறைய பேர் தோன்ற வாய்ப்புள்ளது. எனவே மனிதநேயம் முக்கியம்" என கூறினான். அப்படி பேசி இருந்த அந்த சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலானது. 

பின்னர் அந்த சிறுவன் யார்,  அவரின் பெற்றோர்கள் பற்றிய தகவல்களை நெட்டிசன்கள் தேட தொடங்கினர். சென்னை கண்ணகி நகரை சேர்ந்த இந்த சிறுவனின் பெயர் அப்துல் கலாம். அவரது தாயார் தில்ஷாத் போகம்.இவர் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். அப்துல் கலாமின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.அவரின் நினைவாகவே தன் மகனுக்கு அப்துல் கலாம் என பெயர் சூட்டியுள்ளதாக கூறினார். மேலும் சிறுவனுக்கு இந்தளவு பக்குவம் கண்டிப்பாக பெற்றோரிடம் இருந்து தான் வந்திருக்கும். அதை பற்றி அவர் கூறும் போது " சில மாதங்களுக்கு முன்னர் பள்ளியில் அவனது நண்பர்கள் அவனின் பல்லை பார்த்து கேலி செய்துள்ளனர். அதில் அவன் மிகவும் காயமடைந்தான். அப்போது நான், எல்லோருக்கும் பிரச்னை இருக்கத்தான் செய்யும்.நாம் நம்மை சுற்றி இருக்கும் அனைவருக்கும் நன்மை செய்தால் அவர்கள் ஒரு நாள் நம்மை பற்றி புரிந்து கொள்வார்கள் என சொல்லி சமாதானம் செய்தேன்".

தில்ஷாத் போகத்தின் தாயார் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் மாற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால் பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். அதனால் 14 ஆண்டுகளாகியும் தில்ஷாத் போகத்தின் பெற்றோர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது சிறுவனின் மனிதநேயம் குறித்த பேச்சால் தில்ஷாத் போகத்தின் சகோதரர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக கூறி நெகிழ்ச்சியடைந்தார். மனித நேயம் பற்றி பேசி சிறுவன் அப்துல் காலம் பேசியது 14 ஆண்டுகள் பிரிந்திருந்த குடும்பத்தை சேர்த்து வைத்துள்ளது. இந்த சிறு வயதில் இந்த சிறுவனுக்கு உள்ள பக்குவம் பாராட்டப்பட வேண்டியது.

பின்னர் வேறு ஒரு பேட்டியில் ஹிஜாப் அணிவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "சாதி மத கலவரம் எல்லாம் நமக்கெதுக்கு..அதெல்லாம் தேவையில்லை..எல்லோரும் இந்தியர்கள் தான் .எல்லோருக்கும் ஒரே கலர் ரத்தம் தான்.." என்று கூறியுள்ளான். இதனால் வாடகை வீட்டில் வசிக்கும் சிறுவனின் குடும்பத்தை காலி செய்ய சொல்வதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் அந்த சிறுவனுக்கு ஆதரவாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். தலைமை செயலகத்தில் முதல்வரை, சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.