'எனக்கும் பூ வைத்து விடு'... கோமதி யானையின் குறும்பு!!

தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் சங்கரநாராயண சாமி கோயில் யானை கோமதி, பூ விற்கும் பெண்ணிடம் தனக்கு பூ கேட்டு குறும்பு செய்ததை பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

ஃபுட்பால் விளையாடுவது, மௌத்தார்க்கன் வாசிப்பது, சத்தம் எழக்கூடிய பொருட்களில் தாளமிட்டு மகிழ்வது, மழையின் போது துள்ளி குதித்து விளையாடுவது என பல்வேறு குறும்புத்தனங்கள் செய்து பக்தர்கள் மத்தியில் பிரபலமான யானையாக, பெண்யானை கோமதி இருந்து வருகிறது 

இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயகர் ஊர்வலத்திற்காக சப்பரத்தின் முன்பாக வீதி உலா செல்வதற்கு யானை கோமதி கோவிலை விட்டு வெளியே வந்தது. அப்போது கோவில் வாசலில் பூக்களை கட்டி தட்டில் வைத்து விற்பனை செய்யும் பூக்காரப் பெண்ணை கண்டதும் அப்படியே நின்று தனக்கும் பூ வேண்டும் என்ற தோணியில் பூக்காரப் பெண்ணை பார்த்து தும்பிக்கையை உயர்த்தி பூ வேண்டும் என்ற தோணியில் பூ கேட்டது.

இதை அறிந்து கொண்ட அந்த பூக்கார பெண்ணும் உடனடியாக தனது பூத்தட்டில் இருந்த மல்லிகை பூவை எடுத்து யானை கோமதி இடம் கொடுத்தார். அதை லாபகமாக தும்பிக்கையால் வாங்கிக் கொண்ட யானை கோமதி  தலையை ஆட்டியவாறு தனக்கு அந்த பூவை சூட்டிவிடுமாறு பூக்கார பெண்ணிடம் சைகை காட்டியது.

உடனடியாக பூக்கார பெண்ணும் பூவை யானைக்கு சூட்டி விடுவதற்கு தயாரானார். யானை பாகனின் கட்டளைக்கு ஏற்று இரண்டு முன்னங் கால்களையும் மடக்கி லாவகமாக அமர்ந்து கொடுத்து தனது நெற்றியில் உள்ள முடியின் நடுப்பகுதியில் பூவை வைத்து விடுமாறு யானை கோமதி சினுங்களுடன் அமர்ந்தது.

இதனை அடுத்து அந்தப் பெண்ணும் பூக்கள் கொண்டு யானை கோமதியை அலங்காரம் செய்ய துவங்கினார். உதவியாக யானையின் இரண்டாவது பாகணும் சேர்ந்து கொண்டார். ஒவ்வொரு முறை பூ வைத்து விடும் போதும் பூ வைத்து விடுவதற்கு ஏதுவாக யானை கோமதி தன் முன்னங்கால்களை மடக்கி வளைத்துக் கொடுத்து பூ வைப்பதற்கு தகுந்தாற்போல் தன் முகத்தை கீழ் நோக்கி இறக்கி அந்தப் பெண்ணின் உயரத்திற்கு தகுந்தார் போல் வளைந்து கொடுத்தது.

அந்தப் பெண்ணும் தன்னிடம் இருந்த பூக்கூடையிலிருந்து மல்லிகைப்பூ கனகாம்பரம் ரோசாப்பூ உள்ளிட்ட பூக்களை எடுத்து யானை கோமதியை அலங்காரம் செய்தார். அலங்காரம் முடிந்தவுடன் இப்போதுதான் உன்னை பார்க்க சூப்பராக இருக்கிறது என்று கூறி அந்தப் பெண் யானை கோமதிக்கு திருஷ்டி சுற்றும்போது தனது கைகளை கொண்டு திருஷ்டி சுற்றினார்.

தொடர்ந்து அலங்காரம் முடிந்தவுடன் யானை கோமதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தலையை ஆட்டி தும்பிக்கையை உயர்த்தி குதூகளித்த காட்சி அங்கு இருந்த அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது.

ஆறறிவு ஜீவன்களாகிய பெண்களுக்கு பூ என்பது இஷ்டப்பட்ட பொருளாக இருக்கும் நிலையில் ஐந்தறிவு ஜீவனான யானை கோமதி பூ கேட்டு அடம்பிடித்து பூக்கார பெண் முன்பு நின்று பூவை சூடிக்கொண்ட சம்பவம் அங்கிருந்த பக்தர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது.

இதையும் படிக்க || அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதால் டிடிஎப் வாசன் கைது!!