
ஊட்டி காந்தல் பகுதியில் ஒருவர் வளர்க்கும் தனது மூன்று நாய்களும் தினந்தோறும் அவருடனே அவர் பயணிக்கும் பேருந்தின் பின்பு ஓடி சென்று அவருடனே சுற்றி திரிகிறது.இந்த வித்யாசமான நாய்கள் அவர் வளர்க்கும் நபரின் மீது வைத்திருக்கும் அபிமானம் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார், இவர் உதகை மார்க்கெட் பகுதியில் தினக்கூலி வேலை செய்து வருகிறார்.இவர் மூன்று வளர்ப்பு நாய்களை வளர்த்து வருகிறார். காலை ரவிக்குமார் காந்தல் பகுதியில் இருந்து அரசு பேருந்து மூலம் ஆறு கிலோமீட்டர் பயணம் செய்து தான் தினக்கூலி வேலை செய்யும் பகுதியான உதகை மார்க்கெட் பகுதிக்கு வருவது வழக்கம்.
அவ்வாறு நாள்தோறும் ரவிக்குமார் பேருந்தில் பயணம் செய்து வரும் போது மூன்று வளர்ப்பு நாய்களும் எதையும் பொருட்படுத்தாமல் தனது முதலாளி பேருந்தில் ஏறியவுடன் மூன்று நாய்களும் அந்தப் பேருந்து எங்கெல்லாம் செல்கிறதோ அந்த பகுதிக்கு எல்லாம் ஓடியே செல்கிறது.
தனது முதலாளி ரவிக்குமார் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் அவர் எங்கு வேலை செய்கிறாரோ அந்த பகுதிக்கு சென்று அவருடன் வலம் வருகிறது. நாள்தோறும் மூன்று நாய்கள் தனது முதலாளி பயணம் செய்யும் பேருந்து பின்புறத்தில் ஓடியவாறு தன் முதலாளி மீது வைத்துள்ள விஸ்வாசம் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.