சதுரங்கமாக மாறிய சென்னையின் அடையாளம்- நேப்பியர் பாலம்! - வைரல் வீடியோ:

சதுரங்கமாக மாறியது நேப்பியர் பாலம். 2022ம் ஆண்டின் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாடிற்கு தயாராகியுள்ள சென்னையின் அடையாளம், மக்களிடையே கவனத்தைப் பெற்று வருகிறது.

சதுரங்கமாக மாறிய சென்னையின் அடையாளம்- நேப்பியர் பாலம்! - வைரல் வீடியோ:

சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி, முதன் முறையாக, இந்தியாவில், தமிழகத்தில் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள், ஏகபோகமாக தலைநகர் சென்னையில் நடைப்பெற்று வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துக் கொள்ள இருக்கும் இந்த 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, வருகிற ஜூலை 28ம் தேதி தொடங்கி, ஆகடு மாதம் 10ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

சென்னை மகாபலிபுரத்தில் நடக்க இருக்கும் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு, மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், சென்னை முழுவதும் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

2021 ம் ஆண்டு நடக்க இருந்த இந்த போட்டியானது கொரோனா காரணமாக இணையவழியிலேயே நடைப்பெற்றது. அதில் இந்தியாவும், ரஷியாவும் கோப்பையைப் பகிர்ந்து கொண்ட நிலையில், 2022ம் ஆண்டின் சர்வதேச ஒலிம்பியாட் போட்டி, ரஷியாவில் நடக்க இருந்தது. ஆனால், அங்கு போர் நடந்து வரும் காரணத்தால், இந்தியாவில், அதும் தமிழ்நாட்டின் தலைநகரில் இந்த போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் 44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி  தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், அவர் சென்னை வர இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், "செஸ் ஒலிம்பியாட் 2022" போட்டிக்கான சின்னம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 'செஸ் தம்பி' என்ற இந்த சின்னம் தமிழக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. செஸ் விளையாட்டில் இருக்கும் குதிரை வேட்டி கட்டிக்கொண்டு வணக்கம் கூறி வரவேற்பதை போல அந்த சின்னம் அமைந்துள்ளது. இந்த சின்னத்தை பிரபலப்படுத்தி வருகிறது தமிழக அரசு. 

மேலும், இந்த போட்டிக்கான ட்ரெயிலரும் சமீபத்தில் வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோன்றும் அந்த ட்ரெயிலர், பலரையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. “வெல்கம் டு நம்ம ஊரு சென்னை” என இருக்கும் இந்த பாடல், சென்னை மாநகரின் பிரசித்தியான நேப்பியர் பாலத்தை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

செஸ் போர்டைப் போலவே பெயிண்ட் செய்யப்பட்ட நேப்பியர் பாலத்தில் சதுரங்க காய்கள் போல, கருப்பு வெள்ளை ஆடை அணிந்து அந்த வீடியோவில் ஆடுவதைப் பார்க்க அழகாக இருக்கிறது.

மேலும், இந்த வீடியோவில் இருக்கும் நேப்பியர் பாலம் உண்மையிலேயே தற்போது சதுரங்க போர்டு போலவே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் அடையாளமாக அறியப்பட்டு வரும் நேப்பியர் பாலம், பல வருடங்களாக பல வடிவமைப்புகளைக் கண்டு வருகிறது. சமீபத்தில் முழு வெள்ளை நிறத்தில் சாயம் பூசப்பட்ட நிலையில், தற்போதைய இந்த வடிவமைப்பு, மக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. அதனை வீடியோ எடுத்து நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் நிலையில், இணையம் முழுவதும் அதன் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை பிரம்மாண்டமான முறையில் வண்ண வண்ண உப்பில் வரைந்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.