இனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்… பயனர்களுக்கு சாரி சொன்ன ட்விட்டர்!

இனிமே  ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்… பயனர்களுக்கு சாரி சொன்ன ட்விட்டர்!

புதிய பயனர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கவும் பழைய பயனர்களை வெளியேறாமல் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் ஒவ்வொரு சமூக வலைதளமும் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. 

அந்த அம்சங்கள் உங்களுக்கு மிகச்சிறிய அளவில் இருக்கலாம். ஆனால் பயனர்களின் மனநிலையைப் பொறுத்து அதன் முக்கியவத்துவம் மாறும். அதுதான் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா என பல சோசியல் மீடியாக்களின் பலம். உதாரணமாக பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் மட்டுமல்லாமல் ஸ்டோரி வைக்கும் ஆப்சனும் இருக்கிறது.

ஒருவர் ஸ்டோரி மட்டுமே வைக்கலாம். மற்றொருவர் ஸ்டேட்டஸ் வைக்கலாம். அல்லது இரண்டையுமே சேர்த்து வைப்பவராக இருக்கலாம். ஆக மொத்தம் அந்த அம்சங்கள் பயனர்களுக்கு மனநிறைவைக் கொடுக்கிறது. புதிய பயனர்களை உள்ளிழுக்கிறது. அவ்வாறு உள்ளிழுக்க ட்விட்டர் ” fleets ” என்ற ஸ்டோரி டைப் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் பயனர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்றும், புதிய பயனர்கள் கிடைப்பார்கள் எனவும் ட்விட்டர் நினைத்தது. ஏனென்றால் சில ஆண்டுகளாகவே ட்விட்டரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

இதனால் fleets ஆப்சன் அந்தக் குறையைப் போக்கும் என்று எதிர்பார்த்த ட்விட்டருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இது எந்தப் புரட்சியையும் ஏற்படுத்தவில்லை. மாறாக பயனர்கள் தாங்கள் ட்வீட்களைத் தான் fleets ஸ்டோரியிலும் வைத்தனர். அதாவது ட்வீட் ரீச் ஆக வேண்டுமென்பதால் அவ்வாறு வைத்தனர். உண்மையில் ட்விட்டர் எதிர்பார்த்தது என்னவோ வேறு. பயனர்கள் தங்கள் புகைப்படங்கள், தங்களுக்குப் பிடித்த பாடல்கள், வீடியோக்கள், கிப்களை (GIF) பதிவிடுவார்கள் என்று எண்ணியது. ஆனால் அது நடக்கவே இல்லை என்பது தான் சோகத்தின் உச்சம்.

ட்விட்டரின் போட்டி நிறுவனங்களான பேஸ்புக், இன்ஸ்டாவில் ஸ்டோரி அம்சம் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கையில் இங்கே காத்தாடியது. சொல்லப்போனால் அந்நிறுவனங்களுக்குப் போட்டியாகவே இதை இந்தாண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால் வரவேற்பு இல்லாததால் அதை நிறுத்த முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ட்விட்டர் நிறுவனம், “நாங்கள் ஆகஸ்ட் 3ஆம் தேதி fleets அம்சத்தை நீக்குகிறோம். வேறொரு புதிய மாற்றத்தைக் கொடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். இதற்காக வருந்துகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மிகப்பெரிய மாற்றம் என்பது ட்வீட்களுக்கு போடும் sad, haha போன்ற எமோஜியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.