நிலவை நெருக்கியது ஆர்டெமிஸ்..! நிலவின் துல்லிய புகைப்படங்கள் வெளியீடு..!

நாசா அனுப்பிய ஆர்டெமிஸ் ராக்கெட்டின் ஓரியன் விண்சிமிழ், 5 நாட்களுக்கு பிறகு திட்டமிட்டபடி நிலவை நெருங்கியது. நிலவில், ஓரியன் விண்கலம் மேற்கொள்ளும் ஆய்வுகள் என்ன? நாசாவின் அடுத்த நகர்வுகள் என்ன?
நிலா:
பூமியின் துணைக்கோளாக கருதப்படும் நிலா இரவில் ரம்மியாக காட்சியளித்தாலும், தனக்குள் பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. சூரிய வெளிச்சம் படாத பள்ளங்களும், குகைகளும் தென் துருவத்தில் இருக்கின்றன. இந்த பகுதியை ஆராய்ந்தால், சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்து கண்டறியலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதே சமயம், தண்ணீர் பற்றிய ஆய்வுகளுக்கும் விடை கிடைக்கும் எனக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்
நிலாவை நெருங்கியது:
நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக ஆய்வு முறையில், ஆர்டெமிஸ்-1 ராக்கெட் மூலம் ஓரியன் விண்சிமிழில் கடந்த 16-ம் தேதி நாசா விண்ணில் செலுத்தியது. 5 நாள் பயணத்திற்கு பின்னர் ஓரியன் விண்சிமிழில் ராக்கெட்டில் இருந்து பிரிந்து மிதந்தபடி நிலவை நெருங்கியது. இந்த விண்சிமிழில் மனித வடிவிலான பொம்மைகள் அனுப்பப்பட்டுள்ளது. பொம்மைகளுக்கு பொருத்தப்பட்டுள்ள தோல்கள் அங்குள்ள கதிர்வீச்சை எவ்வாறு தாங்குகின்றன என்பதை கண்டறிய நாசா திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க: பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஆர்ட்டெமிஸ்!!!
புகைப்படங்கள்:
தற்போது, இந்த ஓரியன் விண்சிமிழ் திட்டமிட்டபடி நிலவை அடைந்துள்ளது. பூமியில் இருந்து 3 லட்சத்து 70 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சென்றுள்ள ஓரியன் விண்சிமிழ், அங்கிருந்து நிலாவும், பூமியும் எப்படி இருக்கும் என்பது தொடர்பான படங்களை அனுப்பியுள்ளது. இதுவரை ஓரியன் செயற்பாடுகள், திட்டமிட்டபடி நடந்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள நாசா, நிலவின் தென் துருவத்தில் சுமார் 30 நிமிடங்கள் வரை, இந்த விண்சிமிழ் பயணித்ததாக தெரிவித்துள்ளது.
ஆர்டெமிஸ் 2:
டிசம்பர் 11-ம் தேதி இந்த விண்சிமிழ் பசிபிக் கடலில் விழும். ஓரியன் விண்சிமிழின் ஆய்வு முடிவுகள் பொறுத்தே, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் 2 திட்டத்திற்கு நாசா ஆர்வம் காட்டும் எனக் கூறப்படுகிறது.