அடிப்படை உரிமைக்கு எதிரானதா ”True Caller” செயலி? தடை செய்யக் கோரி மனு.. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன?

இந்த செயலி மூலம் ஒருவரின் விவரத்தை எடுக்கவும், தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மனு தாக்கல்..!

அடிப்படை உரிமைக்கு எதிரானதா ”True Caller” செயலி? தடை செய்யக் கோரி மனு.. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன?

சமூக வலைதளம்: இந்த சோஷியல் மீடியாக்கள் எந்த அளவுக்கு உபயோகமோ அதே அளவுக்கு ஆபத்துகள் நிறைந்ததும் தான். ஆண்ட்ராய்டு செல்போன்கள் வந்த பிறகு, நமது விவரங்கள் அனைத்தையுமே யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். எடுக்க முடியும் என்பது நாம் அறிந்த ஒன்று தான். இது தெரிந்தும் கூட, இன்று நம்மால் ஆண்ட்ராய்டு போன்கள் இல்லாமல் இருக்கவே முடியாது. அப்படி யார் நமது தகவல்களை எடுக்கிறார்கள் என்று தேட ஆரம்பித்தால், கடலில் கடுகினை தேடுவதற்கு சமமாகி விடும். ஆகையால் அதனை நாம் கண்டுகொள்ளாது இருந்து வருகிறோம். 

செயலிகளின் வருகை: ஆண்ட்ராய்டு போன் மட்டுமின்றி நாம் பதிவிறக்கம் செய்யும் ஒவ்வொரு செயலி மூலமும் நமது தகவல்களை யாரோ ஒருவர் எடுத்து அதனை தேவைப்படுபவர்களுக்கு விற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர். உதாரணத்திற்கு, திடீரென்று நமக்கு ஒரு போன் வரும், எதிரில் பேசுபவர்கள் நமக்கு கிரெடிட் கார்டு வேண்டுமா? மருத்துவ காப்பீடு வசதி வேண்டுமா? என கேள்வி கேட்பார்கள். யார் இவர்களுக்கு நமது எண்ணை கொடுத்திருப்பார்கள் என யோசித்து பார்த்தால், எங்காவது செல்லும் போது கூப்பன்கள் தருவதாக கூறி, ஒரு சிறிய அட்டையில் நமது செல்போன் எண்ணையும், முகவரியையும் எழுத கூறியிருப்பார்கள் அதனை நாமும் எழுதியிருப்போம். அப்படி நாம் எழுதிக் கொடுக்கும் விவரங்கள் இவர்களுக்கு விற்கப்பட்டு, அதன் மூலம் நமக்கு போன் வரும். 

True Caller: இப்படி இந்த சமூக வலைதளத்தில் நமது தகவல்களை யார் எப்போது எப்படி திருடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ’’True caller’’ என்ற செயலி மூலம் நமக்கு ஒரு எண்ணில் இருந்து போன் வருகிறது என்றால், அந்த எண்ணை நாம் சேமித்து வைக்கவில்லை என்றால், அந்த எண்ணை வாங்கியவர்களின் பெயர் இந்த செயலி மூலம் நமக்கு தெரியவரும். அதன் மூலம் தெரியாத நபர்களிடம் இருந்து நாம் நம்மை காத்துக் கொள்ள முடியும். 

தடை விதிக்க வேண்டும்: இந்த செயலிக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், எதிர்முனையில் இருப்போரின் அனுமதியின்றி அழைப்பாளரின் தனிப்பட்ட விவரம்  "True Caller"  செயலி மூலம் அறியப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டம் 32ன் கீழ் அடிப்படை உரிமைக்கு எதிரானது என மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் தலையிட முடியாது: இந்த செயலி மூலம் ஒருவரின் விவரத்தை எடுக்கவும், தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வு, இதுபோன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் என உத்தரவிடுவது  நீதிமன்ற வரம்புக்குள்ளானது அல்ல என்றும், இதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.