ஆதித்யா-எல்1 விண்கலம்; கவுண்டவுன் இன்று தொடக்கம்...!

ஆதித்யா-எல்1 விண்கலம்; கவுண்டவுன் இன்று தொடக்கம்...!

ஆதித்யா-எல்1 விண்கலத்தின் 24 மணி நேர கவுண்டவுன் இன்று தொடங்க இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. அதற்காக 'ஆதித்யா- எல்1' என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை
பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-- சி- 57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இருக்கிறது.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கும் நிலையில், அதற்கான ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.  

மேலும் அதற்கான ஒத்திகையை முடித்துவிட்டதாகவும், இன்று அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க    | விக்ரம் லேண்டர் நிலவில் எப்படி இருக்கும்..? படம்பிடித்துக் காட்டியது ’ பிரக்யான்’ ...!

அதனை தொடர்ந்து சந்திரயான்-3  விண்கலம் நன்றாக வேலை செய்வதாகவும், அனைத்து தரவுகளையும் நன்றாக அனுப்புவதாகவும் கூறினார். 14 நாட்கள் முடிவில் எங்களின் பணி வெற்றிகரமாக முடிவடையும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் இன்று மாலை முதல் நாளை வரை  மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிக்க    | நிலவில் சல்பர், பிளாஸ்மா இருப்பதை உறுதி செய்த ரோவர்...!