கூகுளிலிருந்து நீக்கப்பட்ட 8 செயலிகள்...! காரணம் என்ன..?

மால்வேர் (தீங்கிழைக்கும் மென்பொருள்) பாதிக்கப்பட்ட 8 ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் அதன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் இந்த செயலிகள் 3 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

கூகுளிலிருந்து நீக்கப்பட்ட 8 செயலிகள்...!  காரணம் என்ன..?

ஆண்ட்ராய்டு மால்வேர் என்றால் என்ன ?

கணினிகளில் அல்லது மொபைல் போன்களில் பலவகையான மால்வேர்களில் ஆண்ட்ராய்டு மால்வேர் மிகவும் ஒத்திருக்கிறது. ட்ரோஜான்கள், ரான்சம்வேர் , ஸ்பைவேர் போன்ற வைரஸ்கள் பயனரின் சாதனத்திற்கு தீங்கு விளைவிக்கும் தீங்கிழைக்கும் மென்பொருள் தான் ஆண்ட்ராய்டு மால்வேர். 

ஆண்ட்ராய்டு மால்வேரை தடுக்க சில குறிப்பு :  

பாதுகாப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பயனர்கள் இந்த தீங்கு விளைவிக்கும் செயலிகளை பதிவிறக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு மால்வேர் ஊடுருவுவதை நீங்கள் கண்டறிந்து தடுக்கலாம் என்பதை உறுதிப்படுத்த சில குறிப்புகள்:-
  
        1. பயன்பாட்டின் அனுமதிகளை கவனமாகப் படிப்பதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கலாம். பயன்பாட்டின் நோக்கத்திற்கு அவை பொருத்தமானதா என்பதைக் கவனியுங்கள்; முறையற்ற அனுமதிகளை வழங்குவது உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்த உதவலாம். 

       2. ஒரு செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன்பாக அந்த செயலியை பயன்படுத்திய பயனர்களின் விமர்சனங்களை படித்து ஆயுவு செய்து பார்க்கலாம். 

       3. மூன்றாம் தரப்பு செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கலாம். அதில் தான் பெரும்பாலும் இந்த மால்வேர் பாதித்த நிரல்கள் மறைந்திருக்கும்.

       4. இலவச வைரஸ் தடுப்பு சோதனைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் அவை உங்கள் மொபைல் சாதனத்தைப் பாதிக்கும் மல்வேரை கொண்டிருக்கலாம். ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மென்பொருளானது புகழ்பெற்ற சப்ளையர்களிடமிருந்து நியாயமான விலையில் கிடைக்கிறது, மேலும் இது ஆபத்தான பயன்பாடுகளைத் திறம்படத் தடுக்கிறது. 

மால்வேர் : ஆட்டோலிகாஸ்  

தற்போது கூகுள் நீக்கியுள்ள இந்த 8 செயலிகளில் பாதிக்கப்பட்டுள்ள அந்த மல்வேருக்கு ஆட்டோலிகாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை மால்வேர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் மாக்சிம் இங்க்ராவோவால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது முதலில் Bleeping Computer என்ற தகவல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப செய்தி மூலம் அறிவிக்கப்பட்டது. இது தான் தற்போது கூகுள் ப்லே ஸ்டோரில் உள்ள 8 செயலிகளை பாதித்துள்ளது. அதனை கூகுள் நீக்கியுள்ளது. கூகுள் அதன் அறிக்கைகளின்படி, ஆரம்ப ஒப்புதலிலிருந்து இந்த 8 செயலிகளை நீக்க ஆறு மாதங்கள் தேவைப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த செயலிகள் 3 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
  
மால்வேர் பாதித்த அந்த 8 செயலிகள்: 

1. விலாக் வீடியோ எடிட்டர்  (1 மில்லியன் பதிவிறக்கம்)
2. கிரியேட்டிவ் 3D லான்ஞ்சர்  (1 மில்லியன் பதிவிறக்கம்)
3. வாவ் பியூட்டி கேமரா (1,00,000 பதிவிறக்கம்)
4. ஜிஐஎப் எமோஜி கி போர்டு (1,00,000 பதிவிறக்கம்)
5. ரேசர் கி போர்டு & தீம் (50,000 பதிவிறக்கம்)
6. பிரீ க்லோ  கேமரா 1.0.0 (5,000 பதிவிறக்கம்)
7. கோகோ கேமரா v1.1 (1,000 பதிவிறக்கம்)
8. ஃபன்னி கேமரா ( 50,000 பதிவிறக்கம் )

இந்த மால்வேர் பாதித்த செயலிகளை பதிவிறக்கம் செய்வதனால் வங்கி விவரங்கள் அல்லது ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP) போன்ற முக்கியமான தகவல்கள் திருடுபோகவும் வாய்ப்பிருக்கிறது. இந்த செயலிகள் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் மூலம் ஊக்குவிக்கிறது. 

எப்படி நீக்குவது..?

இந்த 8 செயலிகளில் ஏதேனும் ஒன்றை பயனர்கள் பதிவிறக்கம் செய்திருந்தால், முதலில் செய்ய வேண்டியது, உடனடியாக செயலியை நீக்குவதுதான் (UNINSTALL). மேலும், பயனர்கள் தங்கள் பைல் எக்ஸ்ப்ளோரருக்குச்(FILE EXPLORER ) சென்று செயலியின் பெயரைக் கொண்டு தேடி, அந்த செயலி தொடர்பான ஏதேனும் கோப்பைக் கண்டால், அதை நீக்கிவிட்டு, தங்கள் ஸ்மார்ட்ஃபோனை மறுதொடக்கம்(REBOOT) செய்ய வேண்டும். மேலும், சமூக ஊடக விளம்பரங்களில் பார்க்கும் பயன்பாடுகளைப் பதிவிறக்க வேண்டாம் என்று பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.