தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பிடம் மாற்றம்,.சினிமா பாணியில் போலீசாருக்கு தண்ணி காட்டும் யூ-டியூபர் பப்ஜி மதன்.! 

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பிடம் மாற்றம்,.சினிமா பாணியில் போலீசாருக்கு தண்ணி காட்டும் யூ-டியூபர் பப்ஜி மதன்.! 

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தப்பித்து வருவதால் யூ-டியூபர் பப்ஜி மதனை போலீசார் நெருங்குவதில் சிக்கல் நீடிக்கிறது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

பப்ஜி போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டின் நுணுக்கங்களை தனது யூ-டியூப் சேனல் மூலம் நேரலை செய்து பிரபலமானவர் யூ-டியூபர் மதன். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடுவதுதான் இவர் யூ-டியூப் சேனலின் ஸ்பெஷாலிட்டி. இவருக்கு யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கில் மொத்தமாக 9.5 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். கொச்சையான மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் பெண்கள் குறித்து பேசுவதை எதிர்த்து கேட்போரையும் அதே பாணியில் வசைபாடி வருகிறார் யூ-டியூபர் மதன்.

இந்த நிலையில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தரக்குறைவான வார்த்தைகளால் ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டு வீடியோக்களை யூ-டியூபர் மதன் வெளியிட்டு வருவது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. இதனையடுத்து மதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவினருக்கு இரு புகார்கள் வந்தது. யூ-டியூபர் மதனை நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பிய போதும் ஆஜராகாததால்  யூ-டியூபர் மதன் மீது போலீசார் வழக்குபதிவு செய்வதற்காக சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று வருகின்றனர்.

மேலும் வீடியோக்கள் அனைத்துமே ஆபாசமாக இருப்பதால் மதனின் யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்க சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும் வி.பி.என் சர்வரை மதன் பயன்படுத்துவதால் டவர் லொகேஷனை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மதனின் லொகேஷன் சேலம் மற்றும் பெருங்களத்தூரில் காண்பித்த நிலையில் அங்கு தேடிய போதும் மதனை பிடிக்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பினர் போலீசார்.

மேலும் மதன் தனது அடையாளங்களை மறைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் புகைப்படங்களை வைத்து கண்டறிவதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திலும் ஒரு புகார் வந்துள்ளதால் புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இணைந்து யூ-டியூபர் மதனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மதன் தொழில் நுட்பத்தில் கைத்தேர்ந்தவர் போல் தொடர்ந்து தனது அடையாளங்களை மறைத்து வருவதால் மதன் உதவிகள் புரியும் ஆதரவற்றோரின் வங்கி கணக்கை வைத்து தேடும் முயற்சியையும் காவல் துறை தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களை கொச்சையாக பேசியதாகவும், பண மோசடியில் ஈடுபடுவதாகவும் யூ-டியூபர் மதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் மதன் சாதாரண குற்றவாளிகளைப் போல் அல்லாமல் சினிமா பாணியில் இருப்பிடத்தை மாற்றி மாற்றி காவல் துறையினருக்கே தண்ணி காட்டுவது காவல்துறை வட்டாரத்தில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.