ஓடையை கடக்க முயன்ற பெண்ணை இழுத்து சென்ற வெள்ளம்  

கோவை அருகே கனமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஓடையை கடக்க முயன்ற பெண்ணை இழுத்து சென்ற வெள்ளம்   

கோவை மாவட்டம் பேரூர் மத்திபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயா. விஜயா மத்திபாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்த இவர், பணியை முடித்துவிட்டு வழக்கம்போல் வீடு திரும்பியுள்ளார். அச்சமயம் மழையும் பெய்து வந்துள்ளது. இதனிடையே அங்கிருந்த ஓடையைக் கடக்க முயன்ற விஜயா, ஓடையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட விஜயாவை தேடி வருகின்றனர்.

இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக, பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கோதையாறு , பரளியாறு,தாமிரபரணி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஆறுகளில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் உள்பட இதுவரை மூன்று உயிரிழந்துள்ளனர்.

மேலும் குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவி நீர் ஓடு பாதையில் உள்ள அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.