ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் மோதல்…அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுமா?

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் மோதல்…அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுமா?

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை அருகே வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அதிமுகவின் முக்கிய தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, செம்மலை, பா.வளர்மதி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், வைகைச் செல்வன், மாஃபா பாண்டியராஜன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

2000 போலீசார் பாதுகாப்பு

பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குழுமியிருந்தனர். கட்சியின் அடையாள அட்டை, பொதுக்குழு அழைப்பிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்ட பிறகே பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்புக்காக 2000க்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

வழக்கமாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் அருகருகே இருக்கைகள் போடப்பட்டிருக்கும். ஆனால் இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே ஒரு இருக்கையில் தமிழ் மகன் உசேன் அமர்ந்திருந்தார். அதிமுகவின் அவைத் தலைவராகவும் தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒற்றைத் தலைமை குறித்து சி.வி.சண்முகம் … வெளியேறிய ஓ.பி.எஸ்!

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில் பொதுக்குழுவின் அனைத்துத் தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இரட்டைத் தலைமை நிலவுவதால் கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் விரைந்து செயல்படுவதில் தடை உள்ளதாகக் கூறினார். கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் ஒற்றைத் தலைமையயே விரும்புவதாக அவர் கூறினார்.

பொதுக்குழு மேடையில் ஓ.பன்னீர்செல்வம் பேச எழுந்த போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஓ.பி.ஸுக்கு  எதிராக முழக்கமிட்டனர். இதனால் ஓ.பி.எஸ் பொதுகுழுவிலிருந்து வெளியேறினார்.

பிளவுபடுகிறதா அதிமுக..? முடக்கப்படுமா சின்னம்..?

இந்தச் சம்பவத்தையடுத்து இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இடையே பிளவு அதிகரித்துள்ளது. 1987, 2017ல் ஏற்பட்டது போலவே கட்சி இரண்டு அணியாக பிளவுபட்டாலும், ஓ.பி.எஸ் இந்த பொதுக்குழு விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு தனது தலைமையை நிரூபிக்க முயன்றாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலைச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

 - ஜோஸ்