விளாத்திக்குளத்தில் ஒரு கோடி மரங்கள் வளர்ப்பதற்கான பணி தொடக்கம்!

பொதுப்பணித்துறை குளத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

விளாத்திக்குளத்தில் ஒரு கோடி மரங்கள் வளர்ப்பதற்கான பணி தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் மரங்கள் இயக்கம்

அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்களை உள்ளடக்கிய மக்கள் மரங்கள் இயக்கம் என்ற அமைப்பு மூலமாக 1 கோடி மரங்கள் நடும் பணிகள் தொடக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் மூலமாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி முழுவதும் 1கோடி மரங்கள் நட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் பேரூராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை குளத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் மரக்கன்று நடும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

பராமரிப்பு பணியை ஏற்ற உள்ளாட்சி அமைப்பு

குளத்தின் கரையின் இருபுறமும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை பாதுகாக்கும் வகையில் கூண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தினந்தோறும் மரங்கள் இயக்கத்தினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் அதனை பாரமரிப்பு செய்யும் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்

இது குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான பசுமை தமிழ்நாடு திட்டத்தை விளாத்திகுளம் தொகுதி முன்மாதிரியாக செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைப்பாற்றில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுப்பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

விளாத்திகுளம் தொகுதி முழுவதும் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டம் வனத்துக்குள் விளாத்திகுளம் என்ற ஹேஷ்டாக்வுடன் அக்டோபர் 18ஆம் தேதி தொடங்குகிறது. தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைக்கிறார், என்றார்.