15 ஆம் நூற்றாண்டு வேடியப்பன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது!

சுமார் 6 அடி உயரத்தில் முறுக்கிய மீசையுடன் வேடியப்பன் மிகவும் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார்.

 15 ஆம் நூற்றாண்டு வேடியப்பன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது!

விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன். அவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மழவந்தாங்கல் வனப்பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது கி.பி.15 ஆம் நூற்றாண்டு வேடியப்பன் சிற்பம் தற்போது வழிபாட்டில் இருந்து வருவது கண்டறியப்பட்டது. 

வேடியப்பன் சிற்பம் கண்டுபிடிப்பு

இது பற்றி அவர் கூறியதாவது, விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைக்கிராமமான மழவந்தாங்கல் வனப்பகுதியில் தனித்தப்பாறை ஒன்றில் வேடியப்பன் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 அடி உயரத்தில் முறுக்கிய மீசையுடன் வேடியப்பன் மிகவும் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார். அவரது கரங்களில் வில், அம்பு இடம்பெற்றுள்ளன. பின்னணியில் பெரிய விலங்கு ஒன்று காட்டப்பட்டுள்ளது. அது, வேடியப்பனின் வாகனமான குதிரை என்று தெரிவிக்கின்றனர் உள்ளுர் மக்கள். வேடியப்பன் கால்களுக்கு கீழே 2 சிறிய நாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்வதுபோல் காட்டப்பட்டுள்ளன. 

ஆநிரை மீட்புப் போர்

இந்த சிற்பம் கி.பி. 15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் வில்லியனூர் வேங்கடேசன் உறுதிப்படுத்தி இருக்கிறார். வேடியப்பன் வழிபாட்டினை மழவந்தாங்கல், மலையரசன்குப்பம், பில்ராம்பட்டு, வேட்டவலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சேர்ந்தவர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆநிரை மீட்புப்போரில் இறந்த வீரர் வேடியப்பனாக வழிபடப்பட்டு வருகிறார். இந்த வழிபாடு மிகவும் தொன்மையானது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நடுகல்லாக வேடியப்பனை வணங்கி வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் இங்கு தான் வேடியப்பன் சிற்பம் பிரமாண்டமாக செதுக்கப்பட்டுள்ளது. இதுவும் நடுகல் வகையைச் சேர்ந்தது. 700 ஆண்டுகளை கடந்த சிற்பம் இன்றும் அதே பெயரில் வழிபாட்டில் இருந்து வருவது சிறப்பிற்குரியது. மழவந்தாங்கல் வனப்பகுதியில் மேலும் ஆய்வுகள் நடத்தினால் தொன்மை தடயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது வேடியப்பன் கோவில் நிர்வாகி ஆறுமுகம், கவிஞர் அதியமான் ஆகியோர் உடனிருந்தனர்.