நீட் தேர்வுக்கு போட்டோ இல்லாமல் தவித்த மாணவி... கடைசி நேரத்தில் இப்படி செய்த போக்குவரத்து காவலர்!

நீட் தேர்வின் போது பாஸ்போஸ்ட் புகைப்படம் இல்லாமல் தவித்த மாணவிக்கு கடைசி நேரத்தில் உதவிய போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  

நீட் தேர்வுக்கு போட்டோ இல்லாமல் தவித்த மாணவி...  கடைசி நேரத்தில் இப்படி செய்த போக்குவரத்து காவலர்!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்று நீட் தேர்வானது நடைபெற்றது. சென்னையில் 33 தேர்வு மையங்களில் 17,992 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் கீழ்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜான் பிரிட்டோ கீழ்பாக்கத்தில் நடந்த நீட் தேர்வு மையம் அருகே போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் நீட் தேர்வு மையம் அருகே சென்றார்.  அங்கு பதட்டமாக மாணவ-மாணவிகள் இருந்தனர். இதனை கண்ட காவலர் மாணவ- மாணவிகளுக்கு உதவ முன் வந்தார். குறிப்பாக தேர்வு எழுத 15 நிமிடங்கள் மட்டுமே இருந்ததால் சான்றிதழ் சரிப்பார்ப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவை ஒட்ட உதவி புரிந்தார். இதுமட்டுமின்றி பதற்றத்துடன் காணப்பட்ட மாணவ மாணவிகளுக்கு தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்து பதற்றத்தை தணிக்க உதவி செய்தார். அப்போது நீட் தேர்வு சற்று நேரத்தில் தொடங்கும் வேளையில் மாணவி ஒருவர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வீட்டிலேயே மறந்துவிட்டு வந்ததாக புலம்பி கொண்டிருந்தார்.

அதை கண்ட உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோ உடனடியாக தனது இருசக்கர வாகனத்தில் மாணவியை அழைத்து கொண்டு அருகே இருந்த போட்டோ எடுக்கும் கடைக்கு அழைத்துச் சென்றபோது ஞாயிறு கிழமை என்பதால் பல கடைகள் மூடி இருந்தது. இதனால் சுமார் 5 கிமீ தூரம் வரை அழைத்து சென்று புகைப்படத்தை வாங்கி கொடுத்தார்.  பின்னர் உடனடியாக அந்த மாணவியை சரியான நேரத்தில் தேர்வு மையத்தில் இறக்கி விட்டார். சரியான நேரத்தில் தக்க உதவி புரிந்த உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோவிற்கு அந்த மாணவி நன்றி தெரிவித்தார்.

மேலும் முதன் முறையாக தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு பதற்றத்தை போக்கும் வகையில் உதவி ஆய்வாளர் கடைசி நிமிடம் வரை வழிகாட்டி உள்ளே அனுப்பி வைத்ததை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தேர்வர்கள் வெகுவாக பாராட்டி உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.