தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் தென்காசி மாவட்டக் கிளை சார்பில் கொப்பரைத் தேங்காய்க்கு ரூ.150 நிர்ணயம் செய்ய வேண்டும். உரித்த தேங்காய் ஒரு கிலோவிற்கு ரூ.50 வழங்க வேண்டும். தேங்காய்களை அரசே உரிய விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மீராக்கனி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் காதர், மாவட்ட பொருளாளர் சலீம், மாவட்ட துணைச் செயலாளர் சாகுல்ஹமீ து , துணைத்தலைவர் கணபதி, மாவட்ட தலைவர் வேல் மயில் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக போராட்டத்தில் விவசாயிகள் தேங்காயை உடைக்க இருந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை பறிமுதல் செய்தனர்.