தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு முதலமைச்சர் உதவி..! வீடு, ரூ.5லட்சம் வழங்கி உதவி..!

தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு உதவிய முதலமைச்சர்..!

தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு முதலமைச்சர் உதவி..! வீடு, ரூ.5லட்சம் வழங்கி உதவி..!
மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்பட்டவர். தமிழ்த்திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத பாடகரும் ஆவார்.  1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் ஓடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது. தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை [1] என்ற கருத்து அவருடைய ஆத்ம ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு.

பன்னீரில் வாய் கொப்பளித்து, தங்கத்தட்டில் சாப்பிட்டு வளர்ந்த தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, பின்னர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் நிரூபணமாகி வெளியில் வந்தார். பின்னர் சினிமாத் துறையில் நிலைத்து நில்லாது, ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே காலமானார். 

 
தியாகராஜ பாகவதவரின் மகள் வயிற்றுப் பேரனான சாய்ராம் தற்போது ஆதரவற்ற நிலையில், சோற்றுக்கே கஷ்டப்படும் நிலையில் இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இருக்க இடமின்றி தவித்து வந்த அவர், முதலமைச்சர் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோளும் விடுத்திருந்தார். 
 
தகவலறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், சாய்ராம்  மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒன்றையும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5லட்சம் நிதியுதவியும் வழங்கினார்.