ஈகோ, சகிப்புதன்மையை காலனியாக கருதி வீட்டுக்கு வெளியே வைக்க வேண்டும்.! - நீதிபதி அறிவுரை.! 

ஈகோ, சகிப்புதன்மையை காலனியாக கருதி வீட்டுக்கு வெளியே வைக்க வேண்டும்.! - நீதிபதி அறிவுரை.! 


கணவன் - மனைவி இருவரும் ஈகோ மற்றும் சகிப்புதன்மையின்மையை காலணியாக கருதி வீட்டுக்கு வெளியில் விட்டு விட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவர் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றியவர் சசிகுமார். குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் இவருக்கு எதிராக மனைவி இந்துமதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கைச் சுட்டிக்காட்டி, சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்து கால்நடைத் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க கோரி சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னை துன்புறுத்தியதாகவும், கைவிட்டுச் சென்று விட்டதாகவும் , விவாகரத்து உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன் தனக்கு எதிராக குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஏற்கனவே மனுதாரரின் வாதத்தை ஏற்று அவருக்கு விவாகரத்து வழங்கியுள்ள நிலையில், தேவையில்லாமல் மனுதாரரை துன்புறுத்தும் நோக்கில் குடும்ப வன்முறை தடைச் சட்டப் பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, அந்த வழக்கை சுட்டிக்காட்டி சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, 15 நாட்களில் அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார்.

மேலும், மனைவி தான் கைவிட்டுச் சென்றார் என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதால், குடும்ப வன்முறை தடைச் சட்ட வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு, பணி செய்யாமல் ஊதியம் வழங்க வேண்டி வரும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் என்பது ஒப்பந்தமல்ல என்றும் அது ஒரு சடங்கும் என்றும் தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, ஈகோ, சகிப்புதன்மையின்மை ஆகியவற்றை காலணிகளாக கருதி வீட்டுக்கு வெளியில் விட்டு விட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.