இணைந்த கைகள்..! சீமானும், சவுக்கு சங்கரும்..! உதயநிதியை வீழ்த்த வியூகம்..!

சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிட்டால் நானே இறங்கி அவருக்காக வேலை செய்வேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுக்கு சங்கர்:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருந்து வந்த சவுக்கு சங்கரின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. எனினும் அவர் மீது உள்ள 4 வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் 4 வழக்குகளில் இருந்தும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள சவுக்கு சங்கர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் தினமும் ஆஜராகி நிபந்தனையின்படி கையெழுத்திட்டு வருகிறார்.
உதயநிதியை எதிர்த்து போட்டி:
சிறையில் இருந்து வெளிவந்துள்ள சங்கர், தனது செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும், அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். திமுகவை விமர்சித்து வரும் சவுக்கு சங்கர், வரும் சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட்டாலும் சரி, எங்கு போட்டியிட்டாலும் சரி அவருக்கு எதிராக போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
சீமான் - சவுக்கு சங்கர் சந்திப்பு:
உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டியிட்டால் தனக்கு அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எனக்கு ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ள சவுக்கு சங்கர், தான் கைது செய்யப்பட்டபோது தனக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேற்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.
விவசாயி சின்னத்தில் சவுக்கு சங்கர்:
அதன் பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசிய சீமான், சவுக்கு சங்கருக்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் பலமாக நிற்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சவுக்கு சங்கர் போட்டியிட்டால் அந்தத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை நிறுத்தாமல் சவுக்கு சங்கருக்கு ஆதரவு அளிப்போம்; விவசாயி சின்னத்திலும் அவரை களம் இறக்கத் தயார் எனவும், அப்படி இல்லை என்றால் அவர் சுயேட்சையாக போட்டியிட விரும்பினாலும் நான் இறங்கி வேலை செய்வேன் என சீமான் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் நம்பிக்கை:
நாம் தமிழர் கட்சி ஆதரவு கொடுத்தாலும் உதயநிதியின் வெற்றியைத் தடுக்க முடியாது எனக் கூறி வருகின்றனர் திமுகவினர். கடந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வாக்குகள் 93,285. இரண்டாம் இடம் பெற்ற பாமக வேட்பாளரின் வாக்குகள் 23,930. மூன்றாமிடம் பெற்ற நாம் தமிழர் கட்சி, 9,193 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.