குண்டு துளைக்காத கார், தென்னந்தோப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி.! -கெத்து காட்ட நினைத்த ரௌடியை அமுக்கி பிடித்த காவல்துறை.! 

குண்டு துளைக்காத கார், தென்னந்தோப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி.! -கெத்து காட்ட நினைத்த ரௌடியை அமுக்கி பிடித்த காவல்துறை.! 

குண்டு துளைக்காத கார் தயாரிக்க திட்டம், மதுரையில் உள்ள தென்னந்தோப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி என பிரபல ரௌடி சிடி மணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல ரௌடியான சிடி மணி நேற்று முந்தினம் போரூர் மேம்பாலம் வழியாக சென்றுகொண்டிருந்தபோது காவல்துறையினர் சுற்றி வளைத்ததாகவும், காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட முயலும்போது அவரை கைது செய்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிடி மணியை அவர் வசிக்கும் கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்துதான் காவல் துறையினர் பிடித்ததாக அவரின் தந்தையும், வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர். சிடி மணி தனது தந்தை தாய் மற்றும் அண்ணன் குழந்தைகளுடன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சிசிடிவி-க்களை பொருத்தியுள்ளதாகவும், அவரின் செல்போனில் உள்ள பிரத்தியேக செயலி மூலம் காவல் துறையினர் பிடிக்க வந்தபோது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தான் ஆபத்தில் இருப்பதாக தகவல் சென்றதாகவும் கூறப்படுகிறது. எனவேதான் சிடி மணி கைதானதும் அனைவருக்கும் தகவல் சென்றதாகவும், சிடி மணி கைது தொடர்பாக அவரின் தந்தை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவரின் வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிடி மணிக்கு நேற்றைய தினம் பூந்தமல்லி நீதிமன்ற மெஜிஸ்டேட் வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் சிடி மணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சிடி மணி ஆர்டி, பெண்ஸ், பி.எம்.டபள்யூ போன்ற பல விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு காரில் சென்ற சிடி மணியை கொல்ல பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது, ஃபார்ச்சூனர் காரை அவர் வைத்திருந்தார். அந்த கார் தற்போது இல்லாததால் காவல்துறையினர் அதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த காரை குண்டு துளைக்காத காராக மாற்றி வடிவமைக்க டெல்லிக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் சிடி மணி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அடுத்ததாக சிடி மணி வைத்திருந்த 11 குண்டுகள் அடங்கிய கைத்துப்பாக்கியில் 3 குண்டுகள் மட்டும் சுட்டால் சத்தம் மட்டுமே வரும் வகையில் டம்மி குண்டுகளாக இருந்துள்ளன. அதுகுறித்து காவல் துறையினர் ஏன் எனக் கேள்வி எழுப்பியபோது, மிரட்டி பணம் பறிக்கவும், காவல் துறையினரிடம் பிடிபட்டால் தப்பிக்கவும் அந்த குண்டுகளை பயன்படுத்தி அச்சுறுத்த வைத்திருப்பதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மதுரையில் தனது நண்பரின் தென்னந்தோப்பு ஒன்றில் துப்பாக்கி சுட பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிடி மணியின் குண்டு துளைக்காத கார் டெல்லியில் எங்குள்ளது என்ற விசாரணையை தற்போது துவங்கியுள்ள காவல் துறையினர், அதை சென்னைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் குறித்தும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல மதுரையில் உள்ள சிடி மணியின் கூட்டாளி யார் என்ற விசாரணையையும் துவங்கி அவரைப் பிடித்து விசாரணை மேற்கொள்ளவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.